ஞாயிறு, நவம்பர் 13, 2011

இன்று சில சுட்ட நகைச்சுவை சிறு கதைகள்4



பரமார்த்தரின் பக்தி

பரமார்த்தரின் வேண்டுகோள்படி மதுரை மன்னன், அவருக்கும் சீடர்களுக்கும் அரண்மனையில் விருந்து அளித்து ஒருநாள் தங்க வைத்தான்.
பட்டு மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்த பரமார்த்தர், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். சீடர்களில் மண்டுவுக்கும் மூடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை.
"குருவே! சற்று நேரம் உலாவினால் தூக்கம் வரும் என்று வைத்தியர் காலையில் யாரிடமோ சொன்னாரே... அதேபோல் நாமும் எங்காவது சென்று உலாவி விட்டு வரலாமே என்றான் மண்டு.
நல்லது! அப்படியே செய்வோம்" என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் பரமார்த்தர்.
தெருவில் நடந்தால், நம்மைத் திருடர்கள் என்று காவலர்கள் பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் உப்பரிகைக்குச் சென்று உலாவலாம்!" என்றான், மூடன்.
அதன்படியே மற்ற சீடர்களையும் எழுப்பிக் கொண்டு, எல்லோரும் மெதுவாக நடந்து சென்றனர்.
உப்பரிகையின் படிகள் இருக்குமிடம் வந்ததும், மட்டி மட்டும் குருவை மிஞ்சிய சீடனைப் போல கட கட என்று அவரைத் தள்ளிக் கொண்டு வேகமாக மேலே ஏறினான்.
நான்கு படிகள் ஏறுவதற்குள் கால் வழுக்கிக தடதட என்று உருண்டு கீழே வந்தான். உருண்டு வந்த வேகத்தில் குருவின் மேல் மோதி அவர் பின்னால் வந்த சீடர்களை மோதி எல்லோரும் உருண்டு கீழே வந்து சேர்ந்தனர்.
"மட்டியே! அவசரப்படுகிறாயே!" என்று திட்டினார் பரமார்த்தர். மறுபடியும் எல்லோரும்
மெதுவாக ஏறி, உப்பரிகையை அடைந்தார்கள்.
அன்று முழு நிலவு நாள். அதனால், நாடும் நகரமும் அழகாகத் தெரிந்தது. "அற்புதம், அற்புதம்" என்று குரு மகிழ்ந்தார்.
அப்போது மடையன் மட்டும் அலறினான்
"என்ன? என்ன?" என்று பதறினார் குரு.
"குளிர்கிறதே" என்றான் மடையன்.
"அப்படியானால் நீ மட்டும் கீழே போய்ப் படுத்துக் கொள். நாங்கள் பிறகு வருகிறோம்" என்று பரமார்த்தர் சொன்னதும் அவன் கீழே இறங்கிப் போய்விட்டான்.
குருவும் மற்ற சீடர்களும் நகர அழகைக் கண்டு கொண்டு இருந்தனர்.
அரச வீதிகளில் நிறைய காவல் இருந்தது. குதிரையில் வீரர்கள் அப்படியும் இப்படியும் பாரா வந்து கொண்டு இருந்தனர்.
அந்த வீரர்களைப் பார்த்துக் குருவுக்கும், குதிரைகளைப் பாத்துச் சீடர்களுக்கும் நடுக்கம் ஏற்பட்டது.
அதற்கள் கீழே இறங்கிப் போன மடையன், மறுபடி மேலே ஏறி வந்து, "குருவே.. நான் கீழே இறங்கிப் போனேன். அங்கே இரண்டு பேர். ஒருவன் குண்டாக இருந்தான்; இன்னொருவனுக்குத் தாடியும் மீசையும் உள்ளது. இருவரும் அரண்மனையை விட்டு வெளியே போகிறார்கள். நிச்சயமாக அவங்க இரண்டு பேரும் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்று மூச்சு வாங்கக் கூறினான்.
"அப்படியா? அப்படியானால் உடனே அவர்களைப் பிடித்தாக வேண்டுமே!" என்ற பரமார்த்தர், "எல்லோரும் வாருங்கள், கீழே போவோம்" என்றபடி இறங்கினார்.
எல்லோரும் வேகமாக அரண்மனை வாசலுக்கு ஓடிவந்து பார்த்தனர். மடையன் சொன்னபடி இரண்டுபேர் குண்டாக ஒருவரும், ஒல்லியாக ஒருவரும் வேகமாக மறைந்து மறைந்து போவது தெரிந்தது.
அப்போது அங்கே சிலக காவலர்கள் ஓடிவந்தார்கள். அவர்களிடம், "மடையர்களே! அதோ பாருங்கள், இரண்டு திருடர்கள் அரண்மனையிலிருந்து பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டு போகிறார்கள். ஓடிப் போய் அவர்களைப் பிடியுங்கள்!" என்று கோபத்துடன் திட்டினார்.
வீரர்கள், குருகாட்டிய திசையில் ஓடினார்கள். பரமார்த்தரும், சீடர்களும் திருடன்!திருடன்! விடாதே, பிடி! என்று கத்தியபடியே பின்னாலேயே துரத்தினார்கள்.
அதற்குள் சப்தம் கேட்டு அரண்மனையிலும் நகரத்திலும் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். எல்லோரும் தெருவுக்கு ஓடி வந்து பார்த்தனர்.
ராஜ வீதியில் ஒரே கலவரம். கூக்குரல்கள். அப்போது மூடன், "அதோ...அதோ.. பிடியுங்கள்" என்று கத்தினான்.
பரமார்த்தரும் சீடர்களும் அந்த இருவர் மீதும் தடால் என்று விழுந்து உருட்டி, அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.
வீரர்கள் அவர்களை விலக்கி, திருடர்களை உற்றுப் பார்த்தனர். உடனே, "அரசே! மந்திரியே! நீங்களா?!" என்று வியந்தனர்.
"எல்லோரும் அரசர் காலில் விழுந்து, "எங்களை மன்னியுங்கள்! இந்தக் குருவும் சீடர்களும்தான் உங்களைத் திருடர்கள் என்று கூறினர்" என்று நடுங்கியபடி கூறினர்.
பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அரசரையே திருடன் என்று சொல்லி விட்டோமே என்று பயந்து நடுங்கினார்கள். கோபம் அடைந்த மக்கள் குருவையும் சீடர்களையும் அடிப்பதற்குச் சென்றனர்.
உடனே அரசர், "பொதுமக்களே! நானும் மந்திரியும் நகர சோதனைக்குச் செல்வது தெரியாமல் பரமார்த்த குரு தவறாக நினைத்து விட்டார். உண்மையிலேயே திருடர்களாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சீடர்களையும், பரமார்த்தருக்கு இருக்கும் அரச பக்தியையும் நான் பாராட்டுகிறேன். பரமார்த்தரும் சீடர்களும் இரவில் கூடத் தூங்காமல் காவல் செய்வதை நினைத்துப் பூரிப்படைகிறேன். இதற்காக நாளையே அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம்!" என்று கூறினார்.
மக்களும், பரமார்த்த குரு வாழ்க! சீடர்கள் வாழ்க! என்று முழக்கமிட்டனர்.
குருவும் சீடர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.

                                     ************************************

வாழ்க இராமர் - வாழ்க சீதை

ஒரு கோயிலுக்குள் இரண்டு திருடர்கள், பூட்டை உடைத்துச் சாமி சிலைகளைத் திருடிக் கொண்டு இருந்தார்கள்.
அந்த வழியே சென்ற பரமார்த்தரும் சீடர்களும் அதைக் கண்டனர்.
"ஐயா! யார் நீங்கள்? ஏன் இந்தச் சிலைகளை எடுக்கிறீர்கள்?" என்று பணிவுடன் கேட்டார் பரமார்த்தர்.
குருவையும் சீடர்களையும் கண்ட திருடர்கள் முதலில் சற்று பயந்தார்கள். பிறகு சமாளித்துக் கொண்டு, "நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இங்கே உள்ள சிலைகளை எல்லாம் அங்கே கொண்டு போகப் போகிறோம்" என்றனர்.
"வெளியூருக்கா? ஏன்?" என்று கேட்டான், மட்டி.
"இந்தச் சிலைகள் இங்கேயே இருப்பதால் என்ன பயன்? வெளியூருக்குப் போனால்தான் அங்கிருக்கும் மக்களும் பார்ப்பார்கள். அப்போதுதான் உங்கள் ஊரின் பெருமை மற்ற ஊருக்கும் தெரியும்" என்றான், திருடரில் ஒருவன்.
"ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த தொண்டைவிட, நீங்கள் செய்யும் தொண்டுதான் பெரியது. உங்கள் பக்தியை மெச்சுகிறேன்" என்று பாராட்டினார், பரமார்த்தர்.
ஆனால், மட்டிக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. "இதை நீங்கள் திருடிக் கொண்டு போகிறீர்கள்" என்றான்.
அதைக் கேட்ட திருடர்கள், "சே, சே! திருடுவதாய் இருந்தால் யாருக்கும் தெரியாமல் அல்லவா திருட வேண்டும்? உங்களுக்குத் தெரிந்துதானே எடுத்துக் கொண்ட போகிறோம்? இது எப்படித் திருடுவது ஆகும்?" என்று கேட்டனர்.
"ஆமாம்! எங்கள் முன்னிலையில் நடப்பதால் இது திருட்டு இல்லைதான்!" என்று ஒப்புக் கொண்டான் மட்டி.
மறுபடியும் சாமி சிலைகளைப் பெயர்த்து எடுத்தனர், திருடர்கள்.
அவர்கள், கஷ்டப்படுவதைக் கண்ட மடையன் "குருதேவா! இவர்களுடன் சேர்ந்து நாமும் கொஞ்சம் தூக்கி விடலாமே" என்று கேட்டான்.
"ஓ! தாராளமாக உதவி செய்வோம்" என்று சொல்லியவாறு சிலைகளைத் தூக்கப் போனார் குரு.
ஒரு வழியாக இராமர் சிலை, சீதை சிலை, ஆஞ்சநேயர் சிலை எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்தனர்.
"குருவே! இவ்வளவு காலமாக இந்தச் சாமி சிலைகள் நம் ஊரில் இருந்தன. இப்போது வெளிநாடு எல்லாம் சுற்றிப் பார்க்கப் போகின்றன. ஆதலால் இன்று விசேஷ பூசை செய்துதான் அனுப்ப வேண்டும்" என்றான், முட்டாள்.
"யாராவது ஆள் வந்துவிடப் போகிறார்கள் என்று பயந்த திருடர்கள், "சீக்கிரம் செய்யுங்கள்" என்று அவசரப்படுத்தினர்.
பரமார்த்தரும் அவசரம் அவசரமாக மந்திரம் சொல்லியபடியே பூசை செய்தார். சீடர்களும் சிலைகளின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தனர்.
பூசை முடிந்ததும் கோயிலுக்கு வெளியில் தயாராக இருந்த வண்டியில் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போக நினைத்தனர், திருடர்கள்.
அப்போது பரமார்த்தரும், மட்டி, மடையன், முட்டாள் ஆகிய மூன்று சீடர்களுக்கும் உற்சாகம் அதிகம் ஆயிற்று.
"சாமிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே வாழ்க இராமர்! வாழ்க சீதை! ஆஞ்சநேயருக்கு ஜே!" என்று காட்டுக் கத்தலாகக் கத்தினார்கள்.
அவர்கள் கத்துவதைக் கண்ட திருடர்களுக்குப் பொறுமை போய் விட்டது.
"அடப் பாவிகளா! கடைசி நேரத்தில் சத்தம் போட்டு எங்கள் காரியத்தையே கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே" என்று திட்டினார்கள்.
"சத்தம் போட்டால் என்ன தப்பு?" என்று கேட்டான் மடையன்.
குதிரை மீது ஏறிக் கொண்ட திருடர்கள், வண்டியை ஓட்டியபடியே, "முட்டாள்களே! நாங்கள் இந்தச் சிலைகளைத் திருடிக் கொண்டு போகிறோம். இது கூட உங்களுக்குத் தெரியவில்லையே!" என்று உண்மையைக் கூறினர்.
அதைக் கேட்டுப் பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
"என்ன? திருடிக் கொண்டு போகிறீர்களா?" என்றபடி மயங்கி விழுந்தான், முட்டாள்.
"ஐயோ, திருடர்கள்! திருடர்கள்!" என்று கத்தினான், மட்டி.
அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை வண்டியின் பின்னே ஓடிப்போய், கீழே விழுந்து உருண்டான், மடையன்.
பரமார்த்தரோ, அதிர்ச்சியில் சாமிபோல் சிலையாகி நின்றார்.
பரமார்த்தரின் மடத்தருகே வந்ததும், திருடர்கள் வண்டியை நிறுத்தினர். சிலைகளுடன் மடத்துக்கள் சென்றனர்.
உள்ளே மண்டுவும், மூடனும் இருந்தனர்.
"அடேய்! நாங்கள் கொஞ்ச நேரம் இங்கே தூங்கப் போகிறோம். அதுவரை இந்தச் சிலைகளைப் பத்திரமாக வைத்திருங்கள். தூங்கி எழுந்ததும் சிலைகளை எங்களிடமே ஒப்படைத்து விட வேண்டும்" என்று கட்டளை இட்டனர்.
அவர்களைப் பார்த்த பயந்து போன மண்டுவும், மூடனும், சரி என்று சம்மதித்தனர். சிறிது நேரத்தில் திருடர்கள் குறட்டை விட்டுத் தூங்கி விட்டனர்.
"சிலைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே? என்ன செய்வது?" எனக் கேட்டான் மண்டு.
"நம்மால் காவல் காக்க முடியாது. தொலைத்து விடுவோம். இல்லாவிட்டால் நாமும் தூங்கி விடுவோம். அதனால் நேராக மன்னரிடமே கொண்டு அரண்மனைக்குப் போனார்கள்.
அரண்மனையில் பரமார்த்தரும் மற்ற சீடர்களும் அழுது கொண்டு இருந்தனர்.
மண்டுவும், மூடனும் சிலைகளுடன் வருவதைக் கண்டு, அரசன் உட்பட அனைவரும் வியப்படைந்தனர். நடந்தவற்றை கேள்விப்பட்ட அரசன், "சிலைகள் திருடு போவதற்கு உதவியாக இருந்ததும் நீங்களே! அதனால் தண்டனையும் தராமல், பரிசும் தராமல் அனைவரையும் சும்மா விட்டு விடுகிறேன்" என்றான்.
குருவும், சீடர்களும் தப்பித்தால் போதும் என்று அரண்மனையை விட்டு ஓடிவந்தனர்.
                                        
                                         ************************************

தோட்டத்தில் மேயுது ...

அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.
செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, "ஐயோ! போச்சு! போச்சு!" என்று அலறினான்.
பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.
மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.
"அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்; எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே" என்று வருத்தப்பட்டார் பரமார்த்தர்.
செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை யோசனை கூறுமாறு கேட்டார்.
"குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!" என்றான் முட்டாள்.
"நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில் கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்!" என்றான்ன மூடன்.
"புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும் நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்றுவிடுமே!" என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.
அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது. "ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம் இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!" என்றான்.
இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர் கூறிவிட்டார்.
"தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது, பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்! வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்விடும்!" என்று சொன்னான் மட்டி
"ஆமாம்! இதுதான் சரியான வழி!" என்று, ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.
வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும் ஒரே நாளில் செத்து விட்டன.
"குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து போய்விடும்!" என்று சொன்னான் மடையன்.
மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக் கவிழ்த்து வைத்தனர்.
சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.
குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது. "குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும். நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறினான் மடையன். "இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!" என்றபடி குதித்தான் மட்டி
மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும் தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.
இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய் இருந்த வேறொரு பசுமாடு வந்தது.
மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால் என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.
மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில் சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான் மடையன்.
"அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து விட்டோம்!" என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு படுக்கச் சென்றார்கள்.
பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.
பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப் பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.
"டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த எடுத்து வையுங்கள்!" என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும் உதைக்க ஆரம்பித்தான்.
"கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்" என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத் தொடங்கினார்கள்.


                                         ************************************

உதைக்கிற கழுதையே உழைக்கும்

குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர்.
துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர்.
கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர்.
இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு.
அன்று மாலையே அவர் மடத்துகுக் கழுதை ஒன்று வந்து சேர்ந்தது.
கழுதையைப் பார்வையிட்ட பரமார்த்தர், அதன் வாலைப் பிடித்து முறுக்கிப் பார்த்தார்! கோபம் கொண்ட கழுதை, விலுக் கென்று ஒரு உதை விட்டது!
ஐயோ! என்று அலறியபடி தூரப் போய் விழுந்தார் பரமார்த்தர். முட்டாள்களே! என் பெருமைகளைப் பற்றி கழுதையிடம் ஒன்றுமே சொல்ல வில்லையா? என்று கோபமாகக் கேட்டார்.
குருதேவா! உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெளிவாக எடுத்துச் சொன்னோம்! அதனால்தான் உதைத்ததோ என்னவோ! என்றான் மடையன்.
ஆமாம் குருவே! அப்படியும் இருக்கலாம். என்று ஒத்து ஊதினான், மட்டி.
பரவாயில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல் உதைக்கிற கழுதைதான் உண்மையாய் உழைக்கும். ஆகையால் இந்தக் கழுதையே இருக்கட்டும்! என்றார் பரமார்த்தர்.
குருவும் சீடர்களும் கழுதை வைத்திருப்பதை அறிந்த உள்ளூர் திருடன், அதை எப்படியாவது திருடிச் செல்ல திட்டமிட்டான்.
ஒருநாள், கழுதையின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு இருந்தான், திருடன். ஆனால் அதற்குள் சீடர்கள் வரும் சப்தம் கேட்கவே அவசரம் அவசரமாகக் கழுதையை மட்டும் தூர ஓட்டிவிட்டு, அதன் இடத்தில் தான் நின்று கொண்டான்.
வெளியே வந்து பார்த்த சீடர்களுக்கு வியப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது.
இதென்ன? கழுதை இருந்த இடத்தில், மனிதன் இருக்கிறானே! என்றான் மூடன்.
ஒருவேளை இது மாயமந்திரம் தெரிந்த கழுதையாக இருக்குமோ! எனச் சந்தேகப்பட்டான் மண்டு.
அதற்குள் பரமார்த்தரும் வந்து சேர்ந்தார். உன்னைக் கழுதையாகத்தானே வாங்கி வந்தோம். நீ எப்படி மனிதமாக மாறினாய்? என்று கேட்டான் முட்டாள்.
நான் முதலில் மனிதனாகத்தான் இருந்தேன். ஒரு முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். அவர்தான் என்னைக் கழுதையாகப் போகும்படிச் சாபம் இட்டார்.. இப்போது சாபம் நீங்கி விட்டதால் மறுபடி மனிதனாக மாறி விட்டேன்! என்று புளுகினான், திருடன்.
திருடனின் பொய்யைப் புரிந்து கொள்ளாத பரமார்த்தர், மனிதனைக் கழுதையாக மாற்றியதால் தப்பித்தோம். அதே முனிவர் சிங்கத்தையோ, புலியையோ கழுதையாக மாற்றியிருந்தால் இந்நேரம் நம்மையெல்லாம் சாப்பிட்டிருக்கும். நல்லகாலம்! தப்பித்தோம்! என்று மகிழ்ந்தார்.
சீடர்களும், விட்டது தொல்லை, என்று மகிழ்ந்தனர்.
கழுதை இல்லாமலேயே ஜமீன்தார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த சீடர்கள், துணிகளை மூட்டை கட்டி, பாசி பிடித்த ஒரு குட்டைக்கு எடுத்துச் சென்றார்கள்.
வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்பது ஜமீன்தார் கட்டளை என்று சொல்லியபடி, வெவ்வேறு நிறங்களில் இருந்த துணிகளைக் கல்லில் தேய்த்துக் கிழித்தான், மட்டி.
வெள்ளையாக இருந்த வேஷ்டியில் பாசியை தோய்த்துப் பச்சை நிறமாக மாற்றினான் மடையன்.
ஒரே துணியாக இருந்ததைக் கசக்கிப் பிழிந்து முறுக்கி, பல துண்டுகளாக ஆக்கினார்கள், முட்டாளும் மூடனும்.
அப்பாடா! ஒரு வழியாக நன்றாக வெளுத்துக் கட்டி விட்டோம்! என்று மகிழ்ந்தபடி ஜமீன்தார் வீட்டுக்குப் புறப்பட்டனர்.
நீங்கள் ஒரு துணி போட்டீர்கள். நான் அதையே பத்தாக்கிக் கொண்டு வந்திருக்கிறேன்! என்று பெருஐம அடித்துக் கொண்டான், முட்டாள்!
வெள்ளையைப் பச்சையாக்கி விட்டேன்! என்று குதித்தான் மடையன்.
சீடர்கள் கொண்டு வந்த துணிகளைப் பிரித்துப் பார்த்த ஜமீன்தாருக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது.
அடப்பாவிகளா! முழுசாய் இருந்ததை எல்லாம் கிழித்துக் கோவணத் துணிகளாய் ஆக்கி விட்டீர்களே; புத்திகெட்டவர்களை நம்பி இந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னேனே! என்று புலம்பியபடி சீடர்களை விரட்டி அடித்தார்.
உம்... நம் தொழிலூ திறமையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே! என்று வருத்தப்பட்டபடி மடத்துக்கே திரும்பினார்கள், ஐந்து சீடர்களும்.

                                         ************************************

வெள்ளை யானை பறக்கிறது

மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது.
குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி.
தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன்.
குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள்.
உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது!
கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை, என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார்.
குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது... வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு.
ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன்.
ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள்.
ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி.
பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர்.
அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார்.
ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி.
பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான்.
நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன்.
அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள்.
கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு.
பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார்.
குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன்.
ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள்.
இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர்.
குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன்.
எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார்.
மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான்.
திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான்.
தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு.
ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன்.
தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள்.
இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன.
உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது.
இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது!
சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது - ஊகும் - கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.
தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை

நன்றி

தமிழ் கூடல்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக