திங்கள், நவம்பர் 21, 2011

உருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரஷர் குறையுமாம்


உருளைக்கிழங்கு என்று சொன்னாலே நம்மில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ். நொறுக்குத்தீனிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள், இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.
அதேநேரத்தில் உருளைக்கிழங்கு என்றாலே, `ஐயோ’ என்று அலறுபவர்களும் உண்டு. கேஸ் டிரபிள், உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சனைகளை நினைத்து உருளைக்கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், `நீங்கள் நினைப்பது தவறு. உருளைக்கிழங்குக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறனுண்டு’ என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்கிறார்கள்.
ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்துகொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை, மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவைச்சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இதுதொடர்பான ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக்கிழங்கு கொடுத்து வந்தனர்.
பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது, அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் சரி, ரத்தக்கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?
பைடோ கெமிக்கல் (Phytochemicals) என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் உருளைக்கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.
உருளைக்கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால், ரத்த கொதிப்பை குறைக்கவல்ல வேதிப்பொருட்களும், பைடோ கெமிக்கல்ஸ்களும் அழிக்கப்பட்டுவிடுகின்றன. எனவே, சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக்கிழங்கின் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே என்று சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் வின்சன்.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு என்பதால், `ம்ம்ம்…. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்’ என்று நீங்கள் புலம்பவேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன்தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.
இனிமே பிரஷர் குறைய தைரியமா உருளைக்கிழங்கு சாப்பிடலாம்!


நன்றி : தினத்தந்தி
 வழிபோக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக