ஞாயிறு, நவம்பர் 13, 2011

இன்று சில சுட்ட நகைச்சுவை சிறு கதைகள்

  மறைக்க முடியாத பொய்!

ஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.
பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.
அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.
"மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?" என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.
"நான் இல்லை", "நான் இல்லை" என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து "நான் தின்னவில்லை" என்று சொன்னாள்.
"ஓகே........யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள் ஜானகி ஆன்ட்டி.
பட்டுக்குட்டி பயந்துபோய், "இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்" என்று கூறி அழத் தொடங்கினாள்.
"பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது..........என்ன?" என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.
                                           ********************************

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்...

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.
"போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.
சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து "அப்படிப்போடு...........அப்படிப்போடு" என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.
முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது
                                           ******************************** 

ஆசைக்கும் எல்லை உண்டு!

ஒரு காட்டிலாகா அதிகாரிக்கு, அழகான ஒரு மகள் இருந்தாள்.
ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டில் ஓடியபோது, அவளை ஒரு சிங்கம் பார்த்தது. அதற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அது நேரே காட்டிலாகா அதிகாரியிடம் சென்று, தனக்கு அவர் மகளைக் கல்யாணம் செய்து வைக்கும்படி கேட்டது.
அதிகாரிக்கு சிங்கத்திடம் பயம். அதனால், "நோ" சொல்ல முடியவில்லை. "என்ன செய்யலாம்" என்று யோசித்தார். அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது.
அவர் சிங்கத்தைப் பார்த்து, "காட்டு ராஜா......காட்டு ராஜா....என் மகள் ரொம்பப் பயந்தவள். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால், அவளுக்குப் பயம் தெளிந்துவிடும்! அப்புறம், நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்!" என்று சொன்னார்.
அந்தப் பெண்மீது கொண்ட ஆசையால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டிலாகா அதிகாரி, முதலில் அதன் பற்க€ப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.
பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் ஆயிற்று! உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து, அதை "அடி, அடி" என்று அடித்து விரட்டினார்.
கடை நிறைய இருக்கும் ஐஸ்கிரீம் எல்லாவற்றையும், தானே சாப்பிடவேண்டும் என்றும் சின்னப் பிள்ளைகள் ஆசைப்பட்டால் நடக்குமா?
அதுபோல, நடக்க முடியாததற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, "தப்பித்தோம்....பிழைத்தோம்" என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!

                                           ******************************** 

முட்டாளும் புத்திசாலியும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.
'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.
'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.


                                           ********************************

அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது.
ஓநாயும் "நண்பா, நண்பா...இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை....." என்று வருத்தத்துடன் கூறியது.
"அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.
"சேச்சே...அதெலாம் சுத்தப் பொய்!" என்றது ஓநாய்.
"அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.
"உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை...அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?

                                           ********************************

நொண்டிக் குதிரை

பரமார்த்த குருவுக்கு ஒரு பணக்காரன் இலவசமாக ஒரு குதிரையைக் கொடுத்தான்.
அந்தக் குதிரையோ கிழடு தட்டிப் போயிருந்தது. ஒரு கண் நொள்ளை! ஒரு காது மூளி! முன் கால்களில் ஒன்று நொண்டி! பின் கால்கள் வீங்கிப் போய் இருந்தன.
உடம்பு பூராவும் சொறிபிடித்து, பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது. இருந்தாலும், பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் பரம சந்தோஷம். "பணம் செலவு செய்யாமல் இலவசமாகக் கிடைத்ததே!" என்று நினைத்தனர்.
"குருவே! கடிவாளம் கட்டுவதற்கு வார் இல்லை. அதனால் வைக்கோல் பிரியைச் சுற்றி விடலாம்!" என்று அப்படியே செய்தான் மட்டி.
குரு உட்காருவதற்காக, கிழிந்து போன பழைய கந்தல் கோணி ஒன்றைக் குதிரைமேல் போட்டான் மண்டு. எருக்கம் பூவைப் பறித்து மாலையாக்கி குதிரையின் கழுத்தில் அணிவித்தான், முட்டாள்.
இவர்கள் செய்வதைப் பார்ப்பதற்கு ஊரே கூடி விட்டது. குதிரைக்கு எல்லா அலங்காரமும் முடிந்தது.
தொந்தியும், தொப்பையுமாய் இருக்கும் பரமார்த்தர், குதிரையின் மேல் பெருமையோடு ஏறி உட்கார்ந்தார். அவ்வளவுதான்!
கனம் தாங்காமல் வலியால் குதிரை அலற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அப்படியே படுத்து விட்டது.
"சே, சே! இதென்ன சண்டித்தனம் பண்ணுகிறது?" என்று சலித்துக் கொண்டே கீழே இறங்கினார் குரு.
முட்டாளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கையில் வைத்திருந்த கொள்ளிக் கட்டையைக் கொண்டு போய் குதிரையின் காலில் வைத்தான். உடனே அது விலுக்கென்று உதைத்துக் கொண்டு எழுந்தது. இப்படியும் அப்படியுமாக கொஞ்ச தூரம் ஓடி நின்றது.
மறுபடியும் குரு அதன் மேல் உட்கார்ந்தார். இப்போது மட்டி, அதன் வாலைப் பிடித்து முறுக்கினான். கோபம் கொண்ட குதிரை எட்டி ஓர் உதை விட்டது.
அது உதைத்த உதையில் கீழே விழுந்து புரண்ட மட்டிக்கு நாலு பற்கள் உடைந்து விட்டன! வாயெல்லாம் ரத்தம்.
இதை எல்லாம் பார்த்த குருவுக்கு உதறல் எடுத்தது.
"சீடர்களே! எனக்குப் பயமாக இருக்கிறது. நான் கீழே இறங்கி விடுகிறேன்!" என்றார்.
"குருவே! நீங்கள் கவலையே பட வேண்டாம். அப்படியே உட்கார்ந்து இருங்கள். நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்!" என்று பதில் சொன்னான் முட்டாள்.
மண்டுவுக்கும் மடையனுக்கும் வேறு ஒரு யோசனை உதித்தது.
குதிரைக்கு முன்னால் நின்று கொண்டு, முகத்தைக் கோணலாக்கி, கண்களை உருட்டி, உதட்டைப் பிதுக்கி, "ஆ....ஊ....ஊ..." என்று ஊளையிட்டுப் பயம் காட்டினார்கள்.
இதனால் குதிரை ஒரேயடியாக மிரண்டு, மெல்ல மெல்லப் பின் பக்கமாக நடக்க ஆரம்பித்தது! குருவுக்கும், சீடர்களுக்கும் அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கைதட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
தொடர்ந்து பின்பக்கமாகவே குதிரை ஓடவும் தொடங்கியது.
"நொண்டிக் குதிரை! நொள்ளைக் குதிரை! குருவுக்கேற்ற குதிரை! கழுதைபோல எட்டி உதைக்கும்! நாயைப் போல் ஆளைக் கடிக்கும்! ஓரம் போங்கோ! வழியை விடுங்கோ!" என்று பாடியபடி சீடர்கள் போய்க் கொண்டு இருந்தனர்.
பின்பக்கமாகவே ஓடுவது குதிரைக்குப் பழகி விட்டது.
அப்போது அடுத்த ஊரின் எல்லை வந்தது. அங்கிருந்த மணியக்காரன் இவர்களை நிறுத்தினார்கள்.
"வெளியூர்க் குதிரைக்கு வரி கட்ட வேண்டும். பத்துப் பணம் எடுங்கள்" என்றான்.
"வரியா? நான் ஏறி வருகிற குதிரைக்கு வரிக வாங்கலாமா? அதுவும் இது இனாமாகவே வந்த குதிரை. இதற்கு வரி கட்ட மாட்டோம்!" என்று கூறினார் குரு.
"எதுவானாலும் சரி. வரி கொடுக்காவிட்டால் விடமாட்டேன்" என்று சொல்லி அவர்களை மடக்கினான், மணியக்காரன்.
"நாம் கொடாக்கண்டன் என்றால் இவன் விடாக்கண்டனாய் இருக்கிறானே!" என்று நினைத்து ஐந்து பணம் கொடுத்தனர்.
"இன்னும் ஐந்து பணம் கொடுங்கள்"
"ஒரு குதிரைக்கு ஐந்து பணம்தானே வரி?"
"ஒரு பக்கம் மட்டும் போகும் குதிரைக்குத்தான் ஐந்து பணம். உங்கள் குதிரை பின்னாலும் போகிறதே!"
"இதென்ன அநியாயம்?" என்று வருத்தப்பட்டு மேலும் ஐந்து பணம் தந்தனர்.
"இந்தக் குதிரையால் நமக்கு எவ்வளவு பணம் நஷ்டமாகிறது?" என்று சொன்னபடி பயணத்தைத் தொடர்ந்தனர்.
ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்து, ஒரு மடத்துக்குப் போனார்கள். அப்போது இரவு நேரம். எல்லோருக்கும் களைப்பாக இருந்ததால், குதிரையைக் கட்டிப்போட மறந்து, தூங்கி விட்டனர்.
காலையில் எழுந்து ஆளுக்கொரு பக்கமாகத் தேடிக் கொண்டு போனார்கள்.
கடைசியில் ஒரு வயலுக்குப் பக்கத்தில் அந்தக் குதிரை கட்டப்பட்டு இருந்தது!
"இது இரவு முழுவதும் என் வயலில் இறங்கி பயிர்களை எல்லாம் நாசம் செய்து விட்டது. அதற்குப் பதிலாகப் பத்துப் பணம் கொடுத்தால்தான் குதிரையை விடுவேன்" என்று சொன்னான், அதைக் கட்டி வைத்திருந்த உழவன்.
அவனிடம் பேரம் பேசி நான்கு பணம் கொடுத்து விட்டுக் குதிரையை ஓட்டி வந்தனர்.
"சீ...சீ...!" இந்தக் குதிரையால் நமக்குப் பெரும் தொல்லை. என் மானமே போகிறது.! பேசாமல் இதை விட்டு விடலாம்! என்று வருத்தப்பட்டார் குரு.
அப்போது அங்கிருந்த ஒருவன், குதிரைக்குப் பீடை பிடித்துள்ளது. அதனால்தான் இப்படி ஆகிறது. அந்தப் பீடையைக் கழித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். செலவோடு செலவாக எனக்கும் ஐந்து பணம் கொடுங்கள் என்று யோசனை சொன்னான். குருவும், சீடர்களும் மூக்கால் அழுது கொண்டே அவனிடம் பணம் கொடுத்தனர்.
பிறகு, குதிரையின் ஒரு காதைப் பிடித்துக் கொண்டு "ஆ! பீடையெல்லாம் இந்தக் காதிலேதான் இருக்கிறது. இதனால்தான் ஏற்கனவே ஒரு காதை அறுத்திருக்கிறார்கள். இப்போது இந்தக் காதையும் அறுத்து விட்டால் சரியாகி விடும்!" என்றான், ஏமாற்றுக்காரன்.
உடனே மட்டி, மண்ணில் விழுந்து புரண்டு, "சீக்கிரம் காதை அறுங்கள்!" என்று குதித்தான். மூடனோ ஓர் அரிவாளைத் தீட்டிக் கொண்டு வந்து கொடுத்தான்.
எல்லோரும் பிடித்துக் கொள்ள, ஏமாற்றுக்காரன், குதிரையின் காதை அறுத்து எடுத்தான்! குதிரையோ வலி தாங்காமல் கீழே விழுந்து கதறியது. பிறகு உயிரை விட்டது!
எல்லோரும் அறுத்த காதைக் கொண்டு போய் ஆழக் குழி தோண்டிப் புதைத்தனர்.
"ஒழிந்தது பீடை! இனி மேல் கவலையில்லை!" என்றான், ஏமாற்றுக்காரன்.
பரமார்த்த குருவும் சீடர்களும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்கள்.

நன்றி

தமிழ் கூடல்

 
 


1 கருத்து:

  1. உங்களது சிறுகதைகள் அனைத்தும் அருமை. நான் சமீபத்தில் http://www.valaitamil.com/literature_short-story என்ற இணையதள முகவரியை பார்த்தேன். அதில் சிறுகதைகள் சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது.

    பதிலளிநீக்கு