‘‘பழைய சோறா இருந்தாக்கூட பரவாயில்லை. ஆனா தொட்டுக்க ஏதாச்சும் இருக்கணும்” என்று சொல்லுமளவுக்கு சைடு டிஷ்சுக்கு பழகிப்போனவை நமது நாக்குகள். ஐந்தாறு வகை காய்களைச் சேர்த்து கமகமக்கும் குழம்பும், ரசமும், கூட்டுமாக ஜமாய்த்திருந்தாலும், ‘‘அதெல்லாம் இருக்கட்டும்.. பொரியல் என்ன?” என்று கேட்டு அது தமக்குப் பிடித்தமானதா என்பதைத் தெளிவு படுத்திக்கொண்ட பிறகே சாப்பாட்டில் கை வைக்கும் ஆட்கள்தான் அதிகம் இங்கே. ‘‘சோறா?” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லும் குழந்தைகள்கூட பொரியலும் வறுவலும் பிடித்துப் போய்விட்டால் இன்னும் கொஞ்சம் என்று சாப்பாட்டை கேட்டு வாங்கி ஒரு கட்டு கட்டுவார்கள். ‘‘நீங்கள் சொல்றதெல்லாம் சரிதான். உடம்புக்கு நல்லதாச்சேனு தினமும் கிலோ கணக்குல காய்கறியை வாங்கி சளைக்காம நானும் பொரியல், வறுவல்னு செஞ்சுட்டுத்தான் இருக்கேன். ஆனா, எதுவுமே ஒண்ணு ரெண்டு நாளுக்குமேல எடுபடமாட்டேங்குதே.. ‘இன்னிக்கும் கோஸ் பொரியலா?’ ‘கேரட்டை விட்டா வேற தெரியாதா?’னு சலிச்சுக்கறாங்க, என்னதான் பண்றது?” என்று புலம்புகிறீர்களா..? உங்கள் கவலைக் குரல் கேட்டுத்தான் இந்த இணைப்பில் மாதம் முழுவதும் தினம் ஒரு விதமாக செய்து அசத்த, முப்பது வகைப் பொரியல்களை (அட வறுவலும் தாங்க. அது இல்லாமலா? சொல்லித் தருகிறார் – சமையல் திலகம் ரேவதி சண்முகம். பேபி கார்ன் பொரியல், பனீர் பொடிமாஸ் என்று வாண்டுகளுக்கு பிடித்த ஐட்டங்கள் மட்டுமல்ல, சத்துக்கள் மிகுந்த கிராமத்து சமாசாரமான பனங்கிழங்கு கூட இங்கே பொரியலாக அவதாரம் எடுத்திருக்கிறது. சமைத்துக் கொடுங்கள். சாப்பிடுபவர்கள் சொல்வார்கள். ”பொரியல்னா இப்படில்ல இருக்கணும்.. பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு!”
ஸ்டஃப்டு கத்தரிக்காய்
தேவை: பிஞ்சு கத்தரிக்காய் அரை கிலோ, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
அரைக்க: சின்ன வெங்காயம்
10, தக்காளி 2, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2
டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், சோம்பு 1
டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1.
செய்முறை: கத்தரிக் காயை
பாதி காம்பு வரை நறுக்கி நான்காக கீறி (முழுவதுமாக வெட்டக் கூடாது)
வையுங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து,
(தண்ணீர் சேர்க்க கூடாது) உப்பு சேர்த்து வையுங்கள். இந்தக் கலவையை
கத்தரிக் காயினுள் சிறிது சிறிதாக அடைத்து வையுங்கள். எண்ணெயை சூடாக்கி,
அதில் கத்தரிக் காய்களை போடுங்கள். அரைத்த பொடி மீதமிருந்தால் அதையும்
காயோடு சேர்த்து, மிதமான தீயில், மூடி வைத்து, அடிக்கடி கிளறிவிட்டு வேக
வையுங்கள். வெந்ததும் கறிவேப்பிலை தூவி கிளறி இறக்குங்கள்.
—————————————————————–
முருங்கை மசாலாப்பொரியல்
தேவை: முருங்கைக்காய் 3, பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.
அரைக்க: தேங்காய்
துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மல்லித் தூள் 1
டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல், சோம்பு 1 டீஸ்பூன்.
செய்முறை:
முருங்கைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்குங்கள்.வெங்காயம்,
தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச்
சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுங்கள். எண்ணெயைச்
சூடாக்கி வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, அரைத்த விழுது, உப்பு
சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பின்னர் முருங்கைக்காய், அரை கப்
தண்ணீர் சேர்த்துக் கிளறி, மூடி வையுங்கள். தீ மிதமாக எரிய வேண்டும்.
முருங்கைக்காய் வெந்ததும், தீயை அதிகப்படுத்தி, கறிவேப்பிலை தூவி, சுருளக்
கிளறி இறக்குங்கள்.
—————————————————————–
பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல்
தேவை: பீன்ஸ் அரை கிலோ,
பெரிய வெங்காயம் 2, மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், கெட்டி தேங்காய்ப்பால் அரை
கப், பூண்டு 4 பல், உப்பு தேவைக்கு, எண்ணெய் ஒன்றரை டேபிள் ஸ்பூன்.
செய்முறை: பீன்ஸை
குறுக்குவாக்கில் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, தேவையான உப்பு சேர்த்து
வேக வைத்தெடுங்கள். (அரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு ஒரு விசில்
வந்ததும் ஆவியை நீக்கி, நீரை வடித்துவிட்டு காயை எடுத்து வைத்தால் காய்
சரியான பதத்தில் வெந்திருக்கும்) பூண்டை நசுக்குங்கள். வெங்காயத்தை நீள
வாக்கில் நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், பூண்டு ஒரு சிட்டிகை
உப்பு சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் வெந்த பீன்ஸ்,
தேங்காய்ப்பால், மிளகாய்த் தூள் சேர்த்து தேங்காய்ப்பால் வற்றும் வரை கிளறி
இறக்குங்கள்.
————————————————————
காலிஃப்ளவர் மிளகுப் பொரியல்
தேவை: காலிஃப்ளவர்
சிறியது 1, பெரிய வெங்காயம் 2, எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்
தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க: மிளகு 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், பட்டை லவங்கம் ஏலக்காய் தலா 1, பூண்டு 6 பல், இஞ்சி 1 சிறு துண்டு
செய்முறை: காலிஃப்ளவரை
சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கூறியுள்ள
பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு நீர் விட்டு நைஸாக
அரையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை
உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் காலிஃப்ளவர், தேவையான உப்பு சேர்த்து
சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமான தீயில், அரை பதத்துக்கு வேக
வையுங்கள். பிறகு மூடியைத் திறந்து அரைத்த விழுதை சேர்த்து, காய் நன்றாக
வேகும்வரை சுருளக் கிளறி இறக்குங்கள்.
———————————————
ஆந்திர கோவைக்காய்ப் பொரியல்
தேவை: கோவைக்காய் அரை
கிலோ, உப்பு தேவைக்கு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள்
ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன். அரைக்க: சின்ன வெங்காயம் 10, மிளகாய் வற்றல்
8.
செய்முறை: காய்களைக்
கழுவி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். வெங்காயத்தின் தோலை நீக்கி
வையுங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து மிளகாய் வற்றலை லேசாக வறுத்து
பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைத்து ஒன்றிரண்டாக அரைத்து
வையுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது. மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி கடுகை
தாளித்து, நறுக்கிய காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து,
மிதமான தீயில் வேக வையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் மூடியை நீக்கிவிட்டு
வெங்காயக் கலவையைச் சேருங்கள். பச்சை வாடை நீங்கி, கலவை வதங்கி
சுருண்டதும் இறக்குங்கள்.
——————————————————–
உருளைக்கிழங்கு ஸ்பெஷல் ஃபிரை
தேவை: உருளைக்கிழங்கு அரை கிலோ, உப்பு, எண்ணெய் தேவைக்கு.
அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், சோம்பு 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்.
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, அரை அங்குல கனத்துக்கு வட்ட வட்டமாக வெட்ட
வேண்டும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து,
தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து, அதனோடு உப்பைக்
கலந்து வையுங்கள். இந்தக் கலவையை உருளைக்கிழங்கு துண்டு ஒவ்வொன்றின் மீதும்
தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். தோசைக் கல்லை சூடாக்கி, அதன் மேல்
கிழங்குகளை பரவலாக அடுக்கி வைத்து, சுற்றிலும் எண்ணெயை ஊற்றுங்கள். இதனை
இருபுறமும் திருப்பிப்போட்டு மொறுமொறுப்பாக நன்கு வேக வைத்து இறக்குங்கள்.
————————————————–
கத்தரி மொச்சைப் பொரியல்
தேவை: கத்தரிக்காய் கால்
கிலோ, காய்ந்த மொச்சை விதை அரை கப், பெரிய வெங்காயம் 2, புளி நெல்லிக்காய்
அளவு, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் கால்
டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.
பொடிக்க: மிளகாய் வற்றல் 8, தனியா 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: மொச்சையை ஓர்
இரவு முழுக்க ஊற வைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து, நீரை வடித்துவிட்டு
வையுங்கள். கத்தரிக்காயையும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்குங்கள்.
புளியை அரை கப் நீரில் கரைத்து வடிகட்டுங்கள். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச்
சூடாக்கி, பொடிக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறு
தீயில் சிவக்க வறுத்து, நைஸாக பொடித்து வையுங்கள். மீதமுள்ள எண்ணெயைச்
சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும்
கத்தரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் கிளறுங்கள்.
கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், புளி கரைசல், வேகவைத்த மொச்சை,
அரைத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து சுருளக் கிளறி கறிவேப்பிலை தூவி
இறக்குங்கள்.
—————————————————-
கோஸ் கடலைப் பருப்புப் பொரியல்
தேவை: முட்டை கோஸ் கால்
கிலோ, கடலைப் பருப்பு கால் கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி
பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு,
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, கடுகு 1 டீஸ்பூன், சோம்பு
அரை டீஸ்பூன்.
செய்முறை: கோஸ்,
வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை பதமாக
வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சோம்பு
தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, இஞ்சி
பூண்டு விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, அதனுடன்
கோஸ், உப்பைச் சேர்த்து, மிதமான தீயில், கோஸ் வேகும் வரைக் கிளறி,
கடைசியில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி
இறக்குங்கள்.
—————————————————-
சேனை ஸ்பெஷல் வறுவல்
தேவை: சேனைக்கிழங்கு அரை கிலோ, உப்பு, எண்ணெய் தேவைக்கு, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், புளி சிறு நெல்லிக்காய் அளவு.
அரைக்க: மிளகு, சீரகம் தலா 2 டீஸ்பூன், சோம்பு, மிளகாய்த் தூள் தலா 1 டீஸ்பூன், பூண்டு 6 பல்.
செய்முறை:
சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சற்று கனமான, அகலமான துண்டுகளாக
நறுக்குங்கள். இதனை தண்ணீரில் போட்டு அதனுடன் புளி, உப்பு, மஞ்சள் தூள்
சேர்த்து முக்கால் பதத்துக்கு கிழங்கை வேகவைத்து இறக்குங்கள். பிறகு நீரை
வடித்துவிட்டுக் கிழங்கை தனியே எடுத்து வையுங்கள். அரைக்கக் கூறியுள்ள
பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுத்து, சிறிதளவு
உப்பு சேர்த்துக் கலக்குங்கள். இந்த விழுதை கிழங்குத் துண்டுகள்
ஒவ்வொன்றின் மீதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். தோசைக் கல்லைச்
சூடாக்கி, அதன்மீது கிழங்குகளைப் பரவலாக அடுக்கி, சுற்றிலும் எண்ணெய்
விட்டு, கிழங்குகளை இரு புறமும் திருப்பி விட்டு மொறுமொறுப்பாக வேக
வைத்தெடுங்கள்.
——————————————————–
பீன்ஸ் பொடிமாஸ்
தேவை: பீன்ஸ் கால்
கிலோ, பெரிய வெங்காயம் 1, உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், சோம்பு அல்லது கடுகு அரை டீஸ்பூன், பொட்டுக்
கடலை 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: பீன்ஸை
பொடியாக நறுக்கி சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பொட்டுக் கடலையை நைஸாக பொடித்து
வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி சோம்பு அல்லது கடுகைத் தாளியுங்கள். பிறகு
வெங்காயம், மிளகாய்த் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள்.
பிறகு பீன்ஸை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, பொட்டுக் கடலைப் பொடியை
சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
——————————————————–
நெல்லை உருளைப் பொரியல்
தேவை: உருளைக்கிழங்கு
அரை கிலோ, பெரிய வெங்காயம் 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு,
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா 1
டீஸ்பூன்.
அரைக்க: தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 5
செய்முறை;
உருளைக்கிழங்கை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயத்தை
நீளவாக்கிலும் நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சிறிதளவு
தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி
கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும்
கிழங்கு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர்
சேர்த்து, மிதமான தீயில் வேகவையுங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும்,
அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி,
கறிவேப்பிலைத் தூவி இறக்குங்கள்.
——————————————————–
பப்பாளிக்காய் பொரியல்
தேவை: பப்பாளிக்காய்
(சிறிய சைஸ்) 1, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 3, மலர வெந்த துவரம்
பருப்பு, தேங்காய்த் துருவல் தலா 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்
ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு,
உப்பு தேவைக்கு.
செய்முறை: பப்பாளிக்காயை
தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து
வடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை
தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும்
வேகவைத்த காய், தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி
இறக்குங்கள்.
——————————————————–
பிஞ்சுமக்காச்சோளப்பொரியல்
தேவை: பிஞ்சு மக்காச் சோளம் 1 கிலோ, உப்பு தேவைக்கு, எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 5, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், புதினா, மல்லி தலா 1 கைப்பிடி.
செய்முறை:
மக்காச்சோளத்தின் பட்டைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி,
உப்பு சேர்த்து பிசறி ஆவியில் ஐந்து நிமிடம் வேகவையுங்கள். அரைக்கக்
கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர்
விட்டு அரையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை
போகக் கிளறுங்கள். பிறகு சோளம், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறி
இறக்குங்கள்.
——————————————————–
கலர்ஃபுல் பொரியல்
தேவை: கோஸ் கால் கிலோ,
கேரட் 2, பீன்ஸ் 100 கிராம், பட்டாணி அரை கப், பொடியாக நறுக்கிய
காலிஃப்ளவர் 1 கப், தேங்காய்த் துருவல் 1 கப், மலர வேக வைத்த பாசிப்
பருப்பு அரை கப், வேக வைத்த கடலைப் பருப்பு அரை கப், உப்பு தேவைக்கு,
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 4, இஞ்சி 1 துண்டு, கடுகு 1
டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 2
செய்முறை: காய்கறிகளைச்
சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து
வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக
நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து இஞ்சி, பச்சை
மிளகாய், மிளகாய் வற்றலை சேர்த்து வதக்குங்கள். அதில் வேக வைத்துள்ள
காய்கறி, பருப்பு வகைகள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி
இறக்குங்கள்.
——————————————————–
பரங்கிக்காய் பொரியல்
தேவை: பரங்கிக்காய் கால்
கிலோ, வேகவைத்த வேர்க் கடலை அரை கப், வெல்லம் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்
தூள் ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு,
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 2, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை: பரங்கிக்காயை
தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். வேர்க் கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து
வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலை (முழுதாக)
சேர்த்து வறுத்து அதனுடன் பரங்கிக்காயை சேருங்கள். அதில் சிறிதளவு உப்பு,
மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறுங்கள்.
காய் வெந்ததும் வேர்க்கடலை, வெல்லம், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை
சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக