தடய அறிவியல் : திக் திக் துறை.. விறு விறு தகவல்கள்!
தன்னுடைய
மனைவியின் சிலம்பை விற்பதற்காக மதுரை வந்தான் கோவலன். அதே நேரத்தில்
பாண்டிய மன்னனுடைய மனைவின் சிலம்பு காணாமல் போயிருந்தது. கோவலன் கொண்டு
வந்தது தன் மனைவியின் சிலம்பு என்று நினைத்த பாண்டிய மன்னன் கோவலனுக்கு மரண
தண்டனை விதித்தான். இதை கேள்விப்பட்ட கண்ணகி தன் இன்னொரு கால் சிலம்பை
எடுத்து பாண்டிய மன்னனின் அவையில் உடைத்தாள். கண்ணகியின் சிலம்பில்
இருந்த்து மாணிக்க பரல்கள் அரசியிடம் இருந்ததோ முத்துமணிகள். இதை பார்த்த
பாண்டிய மன்னன் யானோ அரசன்? யானே கள்வன் என்று இறந்துவிடுவான். இந்த
இடத்தில் சிலம்பு தான் தடயம்!
தடய அறிவியல் என்ற வார்த்தையை இப்போது நாம் கண்டுபிடித்தாலும் பல நூறு
ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இந்த அறிவியல் இங்கு இருந்திருக்கிறது
என்று ஆரம்பித்தார் தடய அறிவியல் துறையின் முன்னாள் இயக்குனர் விஜயகுமார்.
தடய அறிவியல் துறை பற்றியும் தமிழ்நாட்டில் தடய அறிவியல் எப்படி இருக்கிறது
என்பது குறித்தும் விஜயகுமாரிடம் பேசினேன். தன் துறை சார்ந்த அறிவை
பகிர்ந்துக்கொண்டார்.
ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை
ஆரம்பிக்கப்பட்டது என்றவர் தடய அறிவியல் துறையின் பயன்பாடுகளை பற்றி
சொன்னார்.
"நடந்த
குற்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு, உண்மையை கண்டுபிடிப்பதற்கு, சரியான
நபர்களை அடையாளம் காணுவதற்கு தேவையான தடயங்களை எடுத்து அறிவியல் பூர்வமாக
நிரூபிப்பது தான் தடய அறிவியலின் பணி. நாங்கள் நேரடியாக எந்த வழக்கிலும்
நுழைய முடியாது. காவல் துறை எங்களது தேவையை கருதி அழைக்கும் போது குற்றம்
நடந்த இடத்துக்கு செல்வோம். குறிப்பிட்ட குற்றத்துக்கு என்று மட்டுமல்லாமல்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, விபத்தில் இறந்த மற்றும்
சிதைந்த உடல்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தடய
அறிவியல் துறையின் பங்களிப்பு இருக்கிறது.
எம்.எஸ்.இ. முடித்து 74-ம் ஆண்டில் தடய அறிவியல் துறையில் வேலைக்கு
சேர்ந்தேன். ஊட்டியில் வேலை. அங்கு இருந்த ஒரு மலை கிராமத்தில் தன் கணவனையே
மனைவி கொலை செய்திருந்த வழக்கு தான் என் முதல் வழக்கு. இருபதுகளில்
இருந்ததால் ஒரு விதமான பயம் இருந்தது. இதற்கு மலை சார்ந்த இடமும் கூட ஒரு
காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சடலம் இருக்கும்
இடத்துக்கு அருகே அமர்ந்து சாப்பிடுகிற மனநிலைக்கு கூட வந்துவிட்டேன்,"
என்றவர் தான் சந்தித்த சில வழக்குகள் பற்றி விரிவாகச் சொன்னார்.
"சென்னை அருகே இருந்த கிராமத்தில் ஒரு தாய் மட்டும் தனியாக இருக்கிறார்.
கரூரில் வேலைபார்க்கும் மகன் சீரியஸாக இருக்கிறான். உடனே கிளம்பி வரவும்
என்று அவருக்கு ஒரு தந்தி வருகிறது. பதறியடித்து அந்த தாயும் கிளம்பி
செல்கிறார். ஆனால் அங்கு மகன் நன்றாக இருக்கிறான். தந்தி ஏன் வந்தது என்பதை
பற்றி மறந்துவிட்டு மகனுடன் சில நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் ஊர்
திரும்பிகிறார்.
வீட்டை திறந்தவர்க்கு அதிர்ச்சி, உள்ளே வைத்திருந்த பணத்தை காணவில்லை. இந்த
புகார் காவல் துறைக்கு செல்கிறது. அவர்கள் எங்களை உதவிக்கு
அழைக்கிறார்கள். நான் சென்று திருட்டு நடந்த வீட்டை பார்க்கிறேன். ஒரே
வீட்டை இரண்டாக தடுத்திருக்கிறார்கள். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு
வீட்டுக்கு உள்ளேயே செல்ல முடியும். வீட்டின் பூட்டு சரியாக இருப்பதால்
வீட்டின் இன்னொரு பகுதியில் இருந்து வந்து தான் திருடி இருக்க முடியும்
என்று நம்பி நானே ஏறிச்சென்று மேலே பார்த்தேன். பனை மரத்திலான ரீப்பர்
கட்டை நடுவே இருக்கிறது. அந்த ரீப்பர் கட்டை தாவி குதிக்கும் போது பக்கத்து
வீட்டுகாரனின் கால் முடி அந்த மரத்தில் சிக்கி விட்டது. கால் முடியை
எடுத்து ஆராயந்து பார்த்ததில் பக்கத்து வீட்டுகாரன் தான் திருடி
இருக்கிறார் என்று நிரூபிக்க இந்த தடயம் வசதியாக இருந்தது," என்றவர் தான்
சந்தித்த இன்னொரு வழக்கின் விவரத்தை பகிர்ந்தார்.
"இன்னொரு கிராமத்தில் வயதான முதியவரை கொன்று விடுகிறார்கள். வீடு முழுக்க
ரத்தம். சென்று பார்த்தபோது எந்த தடயமும் கிடைக்க வில்லை. ஆனால் முதியவரின்
ரத்தத்தை மிதித்துவிட்டு வெளியே செல்லும் போது கொலை செய்தவனின் கால் தடம்
பதிந்துவிட்டது. அந்த மாதிரியை எடுத்தோம். மேலும் இந்த வழக்கில்
சம்பந்தபட்ட சிலரை காவல் துறையினர் கைது செய்திருந்தார்கள். அவர்களின் கால்
தடத்தை எடுத்துபார்த்ததில் ஒருவனின் கால்தடம் சரியாக பொருந்திவந்தது,"
என்றவரிடம் ரேகை ஆராய்வதும் உங்களது துறைதான என்று கேட்டதற்கு, "என் சொந்த
ஊருக்கு போகும் போதும் கூட என்னை ரேகை பார்க்கும் இடத்தில் வேலை பார்ப்பவர்
என்று சொல்லுவார்கள்," என்று சிரித்துவிட்டு மேலும் தொடர்ந்தார்.
"ரேகையை ஆராய்வது தடய அறிவியல் துறையின் பணி அல்ல. நாங்கள் குற்றம் அல்லது
சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் தடயங்களை அறிவியல் பூர்வமாக
நிரூப்பிப்பது தான் எங்களது பணி.
சம்பவம் என்று என்று சொன்னது தான் காரணம் இருக்கிறது. ஒருவர் மறைந்து
விடுகிறார். அவரது உடல் புதைக்கபட்டுவிடுகிறது. சில நாட்களில்
எழும்புக்கூடு தான் இருக்கும். அப்போது குறிப்பிட்ட இவர் தான் இறந்தார்
என்பதை உறுதியாக கூறமுடியாது. அவர் யார் என்பதையும் தடய அறிவியல் மூலமாக
கண்டிபிடிக்கலாம்.
இறந்தவரின் புகைப்படம் இருக்கும்பட்சத்தில் அதை பெரிதாகக்கி, மண்டை ஓட்டை
வைத்துக்கொண்டு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து சூப்பர் இம்போசிஷன் முறையில்,
இறந்தவர் இவர்தான் என்று கண்டிபிடிப்போம். ஒரு வேளை புகைப்படம்
கிடைக்கவில்லை, இறந்தாக சொல்லப்படும் நபரின் பெற்றோர்களின் டி.என்.ஏ.வையும்
கிடைத்த மண்டையோட்டில் இருக்கும் டி.என்.ஏ.வையும் வைத்து சோதனை
செய்வோம்.ஒருவேளை பெற்றோர்கள் இல்லை என்றால், இறந்தாக சொல்லப்படும் நபரின்
குழந்தைகளின் டி.என்.ஏ.வை எடுத்துக்கொண்டு சோதனை செய்வோம். இது போல பல
வகைகளில் தடய அறிவியல் துறை தடய அறிவியல் துறை செயல்படுகிறது என்று
சொன்னவரிடம்,
"இப்போது உங்களிடன் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் வந்து சென்றதற்கான
தடயத்தை பற்றி சொல்ல முடியுமா என்று விஜயகுமாரிடம் கேட்டதற்கு. உடனடியாக
இரண்டு மூன்று தடயங்களை சொல்ல முடியும். மேலும் உங்களது பழக்கங்களை வைத்து
நிறைய கண்டிபிடிக்க முடியும். முதலில் உங்களது விசிட்டிங் கார்டு இங்கே
என்னிடம் இருக்கிறது. இரண்டாவதாக இந்த டேபிளில் இரண்டு டம்ளர்கள்
இருக்கிறது. அது ஏன் இங்கு இருக்க வேண்டும். அதில் என்ன இருந்தது. மேலும்
அதில் என்ன கலக்கப்பட்டிருந்தது. என்ற அடிப்படையில் தேடலாம். இன்னும்
தேடிப்பார்க்கும் போது நிறைய தடங்களை நீங்கள் விட்டுச் சென்றிருக்கலாம்.
சம்பவம் நடந்த இடத்தில் எது வேண்டுமானலும் தடயமாக இருக்கலாம். அது தான்
தடயம் என்று கண்டுபிடிக்கும் ஆற்றலை அனுபவம் தான் கற்றுக்கொடுக்கும்,"
என்று முடித்தார் விஜயகுமார்.
தடய அறிவியல் துறையின் மற்றொரு பிரபல நிபுணர் சந்திரசேகரிடமும் பேசினேன்.
அவர் தான் சந்தித்த 'கொலை அல்லாத வினோத வழக்கின்' அனுபவங்களை
பகிர்ந்துக்கொண்டார்.
"தடய அறிவியல் துறையில் வேலைக்கு சேரப்போகிறேன் என்று சொன்னவுடனே என்
வீட்டில் அனைவரும் பயந்தனர். இருந்தாலும் எனக்கு இந்த வேலை மிகவும்
பிடித்திருந்தது. இப்போது திருப்பி பார்க்கையில் நிறைய வழக்குக்கு
உதவியிருக்கிறேன் என்று நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது.
தஞ்சாவூர் அருகே பாத்தூர் கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயி தன்னுடைய
நிலத்தை தோண்டி இருக்கிறார். அப்போது நடராஜர் சிலை உடபட அவருக்கு நிறைய
சிலைகள் கிடைத்திருக்கிறது. தேவை கருதி நடராஜர் சிலையை வெறும் 200
ரூபாய்க்கு விற்றுவிட்டார். நிறைய இடங்களுக்கு கைமாறி, அந்த சிலை எங்கு
சென்றதோ தெரியவில்லை. பிறகு தன் வசம் இருக்கும் மற்ற சிலைகளை விற்க
முற்பட்டபோது காவல் துறையில் பிடிபட்டார். விசாரிக்கும்போது நடராஜர் சிலையை
ஏற்கெனவே விற்றுவிட்டார் என்று தெரிய வந்தது.
அது
எங்கு இருக்கிறது இன்டர்போல் உதவியுடன் தேடினால் அது இங்கிலாந்து நாட்டில்
உள்ள ஒரு மியூசியத்தில் இருக்கிறது. இங்கு தடய அறிவியல் எங்கு வருகிறது
என்று யோசிக்க தோன்றும். ஆனால், இங்கும் தடய அறிவியலின் பணி இருக்கிறது.
இதற்கு சிற்பகலை பற்றிய அறிவு வேண்டும். அதிர்ஷ்டவசமாக என் தாத்தா ஒரு
சிற்பி. மேலும், அதைப்பற்றி ஆராய்ந்து இங்கிலாந்தில் இருக்கும் சிலையை
இங்கு கொண்டுவந்தோம். அதற்கு முன்பு அந்த சிலை இங்கிருந்து எடுக்கப்பட்டது
தானா என்று உறுதி செய்தோம். இங்கிலாந்தில் இருக்கும் சிலையில் அளவுகளை
அனுப்பச்சொல்லி, அதுபோல ஒரு மாடல் சிலையை செய்து இந்த சிலைகளுக்கு நடுவே
வைத்துப்பார்த்ததில் இவை அனைத்தும் ஒன்றே என்று முடிவுக்கு வந்தோம்.
(சிற்பகலை உதவியுடன்) அதன் பிறகு இங்கிலாந்து இது எங்களின் சிலை என்று
சொன்ன போது அவர்கள் நம்பவில்லை. இது நடக்கும் என்று தெரிந்து இங்கிருந்தே
மண்களையும், மண்ணுடன் ஐம்பொன் பல ஆண்டுகளாக இருந்தால் எப்படி இருக்கும்
என்பதற்காக அந்த சிலைகளையும் எடுத்து சென்றிருந்தோம். இங்கிலாந்தில்
இருக்கும் சிலையை இருக்கும் மண்ணும் இங்கிருந்து கொண்டி சென்ற சிலைகளையும்
காண்பித்தோம். இரண்டு சிலைகளிலும் இருக்கும் மண் தன்மை ஒன்று தான் என்பதை
நிரூபித்து சிலைகளை இங்கு கொண்டுவந்தோம்.
இன்னொரு திருட்டில் தொலைந்து போன தொகையே 600 ரூபாய் தான். ஆனால் அதற்கான
தடய அறிவியல் செய்த செலவு 1000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து குற்றவாளியை
கண்டிபிடித்தோம்," என்றார்.
மேலும், தடயஙகள் இல்லாமல் குற்றங்கள் நடைபெற வாய்ப்பே இல்லையா என்று
கேட்டதற்கு, "மிகச்சிறிய குற்றங்கள், உதாரணத்துக்கு சிறு திருட்டுகள் எந்த
விதமான தடயமும் இல்லாமல் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெரிய
குற்றங்களில் தடயம் இல்லாமல் செய்யவே முடியாது. இதற்கு உதாரணமாக ஒரு
இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொன்னால் புரியவரும்.
தடய அறிவியல் துறைக்கு சவால் விட்டு நான் இந்த வீட்டில் திருடப்போகிறேன்.
முடிந்தால் நான் வந்ததற்காக தடயங்களை உறுதி செய்யுங்கள் என்று சவால்
விட்டு, ஒரு வீட்டுக்கு திருடப்போகிறார். (நிஜமாக அல்ல சவாலுக்காக). சவால்
விட்டுவிட்டோமே என்று கவனமாக தலைமுடிக்கு கவசம், கையுறை, காலுறை என
எல்லாவிதமான முன் எச்சரிக்கையுடனும் செல்கிறார். அதீத எச்சரிக்கையுடன்
செல்வதால் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு வியர்த்துவிடுகிறது. அதனால்
ஃபிரிட்ஜில் இருந்து ஒரு குளிர்பானத்தை எடுத்துகுடிக்கிறார். அதிலும்
தடயங்கள் இல்லாமல் அழித்துவிட்டு திரும்பிவிடுகிறார்.
சிறிதுநேரத்தில் தடய அறிவியல் துறையினர் செல்கிறார்கள். தேடிப்பார்த்தும்
எந்த விதமான தடயங்களும் கிடைக்கவில்லை. சிறிது நேரத்துக்கு பிறகு அவர்
குடித்த மிச்சம் வைத்த பாட்டலின் மூடி கிடைக்கிறது. இப்போது தான் ஒரு
விஷயம் புரிய வருகிறது. அந்த ஃபிரிட்ஜிலே பாட்டில் திறப்பதற்கான ஓப்பனர்
இருக்கிறது. இருந்தாலும் இவரின் பழக்கத்தின் காரணமாக தன் பல்லை பயன்படுத்தி
பாட்டிலை திறந்திருக்கிறார். அந்த மூடியில் அவர் பல்லின் அச்சு
இருக்கிறது. இருந்தாலும் அது அவரின் அச்சுதான் என்று கண்டிபிடிக்க அவரை சில
நாட்கள் பின்தொடர்ந்து வேறு இடத்தில் இதே போல் பாட்டிலை திறக்கும் போது
அந்த மூடியையும் எடுத்து நிரூபிக்கிறார்கள். பழக்கம் கூட தடயத்தை
உண்டாக்கும்," என்று முடித்தார் சந்திரசேகர்.
தமிழ்நாட்டில் தடய அறிவியல்!
சென்னை உட்பட ஒன்பது மண்டல அலுவலங்கள் இருக்கிறது. மேலும் 33 இயங்கும் தடய அறிவியல் (Mobile Forensic Science Laboratory) அலுவலகங்கள் இருக்கிறது. சென்னை அலுவலகத்தில் மட்டும் அனைத்து 14 சோதனைகளையும் செய்யும் வசதி இருக்கிறது.
தடய அறிவியல் துறையில் எப்படி இணைவது?
இயற்பியல், வேதியியல், உயிரியில் பாடங்களில் பட்ட மேற்படிப்பு
படித்திருத்தவர்கள் டி.என்.பி.எஸ்.இ. தேர்வுகள் மூலமே இந்த பணியில்
சேரமுடியும்.
சில வருடங்களுக்கு முன்பு சென்னை பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி. ஃபாரன்சிஸ்
சயின்ஸ் கோர்ஸ் இருந்தது. இருந்தாலும் இந்த கோர்ஸ் தற்காலிகமாக
நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில்
இந்த படிப்பு இருக்கிறது.
நன்றி : enayamthahir
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக