புதன், நவம்பர் 30, 2011

சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.  இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.  அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்:  யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தைக் காக்க:
*  உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

*  புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.

*  அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

*   எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.

*   தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

*   வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.
-உஸ்மான்-

by valipoacan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக