ஞாயிறு, நவம்பர் 20, 2011

அம்மா சமையல். 1


ஆலு மசாலா!





தேவையானவை: உருளைக் கிழங்கு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள், சீரகத் தூள் – தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் அல்லது மாங்காய் (அம்சூர்) தூள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
செய்முறை:
உருளைக் கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உருளைக்
கிழங்கு துண்டுகள், உப்பு சேர்த்து, தீயை மிதமாக வைத்து நன்கு வதக்குங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு அல்லது மாங்காய்த் தூள் சேர்த்து, கிழங்கு நன்கு வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள். ஆளையே அள்ளும் இந்த ஆலு மசாலா!
ஈஸி குருமா!
தேவையானவை:
நீங்கள் விரும்புகிற காய்கறிகள் – 2 கப், பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், இஞ்சி – 1 சிறிய துண்டு, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 4, சோம்பு – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, கசகசா – 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை 5 நிமிடம் வதக்கி, இறக்கி, ஆறவிட்டு நைஸாக அரையுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சொல்ல மட்டுமல்ல… செய்வதற்கும் ரொம்ப ஈஸி இந்த குருமா! குறிப்பு: இந்த குருமாவில் மீல்மேக்கர் சேர்க்க விரும்புகிறீர்களா? மீல்மேக்கர் உருண்டைகளை, கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து, பிறகு அவற்றைப் பச்சைத் தண்ணீரில் போட்டு 2 முறை கழுவி, 2 துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தை வதக்கும்போதே, இவற்றையும் சேர்த்து வதக்கி, சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான்.
தம் ஆலு!
தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, பெ. வெங்காயம் – 3, தக்காளி – 3, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தக்காளி – 3, எண்ணெய், உப்பு – தேவைக்கு.
பொடிக்க: காய்ந்த மிளகாய் – 4, மிளகு, தனியா – தலா 2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பட்டை, ஏலக்காய் – தலா 1.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சற்றே பெரிய துண்டுகள் ஆக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய துண்டுகளைப் பொரித்தெடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை,வெறும் கடாயில் வறுத்து, பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். இப்போது, மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள், பொடித்து வைத்துள்ள பொடி தூவி, தக்காளி, தேவையான உப்பு, தயிர் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். உருளைக்கிழங்கு ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆகிவிடும் இந்த தம் ஆலு!
குறிப்பு: தக்காளி விருப்பமில்லாதவர்கள், மாங்காய்த் தூள் ஒரு டீ ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
பூண்டு இல்லாத குருமா!
தேவையானவை: நீங்கள் விரும்பும் காய்கறிகள் (நறுக்கியது) – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், முந்திரிப்பருப்பு – 6, உப்பு – தேவைக்கு.
அரைக்க: சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 அல்லது 5, இஞ்சி – 1 துண்டு, மல்லித்தழை – ஒரு கைப்பிடி.
தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலையும் முந்திரியையும் அரைத்துத் தனியே வையுங்கள். பிறகு, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரையுங்கள். இப்போது, எண்ணெய், நெய் இரண்டையும் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் தேங்காய் விழுது, வேகவைத்த காய்கறி சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். பூண்டு விரும்பாதவர்களுக்கான ஸ்பெஷல் குருமா இது!
சன்னா மசாலா!
தேவையானவை: சன்னா – 1 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 2 பல், மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
செய்முறை:சன்னாவை 6 முதல் 8 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். இதனுடன் தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்கி, இறக்கி ஆறவிட்டு, எல்லாவற்றையும் நைஸாக அரைத்தெடுங்கள். இப்போது வெந்த சன்னாவுடன் அரைத்த விழுதை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
அட… ஹோட்டல் சுவையை மிஞ்சும் சன்னா மசாலா தயார்!
சிம்பிள் ஆலு மசாலா!
தேவையானவை:உருளைக்கிழங்கு – அரை கிலோ, சின்ன வெங்காயம் – கால் கிலோ, பூண்டு – 15 பல், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் – 2 கப், உப்பு – தேவைக்கு.
தாளிக்க: சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:உருளைக் கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, சீரகம், சோம்பு தாளியுங்கள். இதில், உரித்துவைத்துள்ள வெங்காயம், பூண்டைப் போட்டு 5 நிமிடம் வதக்குங்கள். பின்னர், இதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நடுத்தரத் தீயில் கிழங்கு அரைப்பதமாக வேகும்வரை வதக்குங்கள். இதனுடன், மிளகாய்த் தூள், தனியா தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, கெட்டியாகும்வரை கிளறி, பச்சை வாசனை போனதும் இறக்குங்கள். பெயர்தான் ‘சிம்பிளே’ தவிர, சுவையில் கில்லாடி இந்த ஆலு மசாலா!
சன்னா கிரேவி!
தேவையானவை:சன்னா – 1 கப், புளிக் கரைசல் – 1 டேபிள் ஸ்பூன், உ. கிழங்கு – 1, வெல்லத்தூள் – 2 டீஸ்பூன், ப. மிளகாய் – 2, பெ.வெங்காயம் – 2, பிரிஞ்சி இலை -1, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், தக்காளி-3, உப்பு – தேவைக்கு.
அரைக்க: பெ.வெங்காயம் (சிறியதாக) – 2, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 6, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.
செய்முறை: சன்னாவை 7 மணி நேரத்துக்கு ஊறவையுங்கள். பிறகு, அதை உப்பு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நடுத்தரமான துண்டுகளாக்குங்கள். ப. மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். தக்காளியை தனியே அரைத்தெடுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலை, ப.மிளகாய் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் அரைத்த தக்காளி, புளிக்கரைசல், வெல்லத் தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், வேகவைத்த சன்னாவையும் உ.கிழங்கையும் சேர்த்து, 5 நிமிடம் கிளறி, இறக்குங்கள்.  இந்த சன்னா கிரேவி, குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
கலர்ஃபுல் மசாலா!
தேவையானவை: காய்கறி கலவை (கேரட், பட்டாணி, பீன்ஸ், பனீர்… சிறு துண்டுகளாக நறுக்கியது) – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 4, மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவைக்கு.
செய்முறை: காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, பச்சை  வாசனை போக மீண்டும் வதக்குங்கள். கடைசியில், வேகவைத்த காய்கறி, தேங்காய்ப் பால் சேர்த்து, விடாமல் கிளறி, 2 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள் (கிளறாமல் இருந்தால், தேங்காய்ப் பால் திரிந்துவிடலாம்). காய்கறி கலவையால் பார்க்கவும் அழகாக இருப்பதால்தான், இதற்கு பெயர் கலர்ஃபுல் மசாலா!
தக்காளி மசாலா!
தேவையானவை:பெ. வெங்காயம் – 4, தக்காளி – 8, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – 15 பல், கறி மசாலா தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, வெந்தயம் – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
அரைக்க: தேங்காய்த் துருவல்-2 டேபிள் ஸ்பூன், கசகசா – 2 டீஸ்பூன்.
செய்முறை:தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெந்தயம், சோம்பு, வெங்காயம், பூண்டு, ம.தூள் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். இதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கறி மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போக வதங்கி, தக்காளி கரைந்ததும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, கறிவேப்பிலை தூவி, கெட்டியாகும்வரை கிளறுங்கள். பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி, பரிமாறுங்கள். சுவையில் இந்த தக்காளி மசாலா, ‘டக்கரான’ மசாலாதா¡!
சுரைக்காய் மசாலா!
தேவையானவை:சுரைக்காய் – 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், தனியா தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,கறிவேப்பிலை – சிறிதளவு, பால் – அரை கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.
செய்முறை: சுரைக்காயைத் தோல் சீவி, நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.
அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, வெந்தயம், சீரகத்தைத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், இதனுடன் சுரைக்காய்த் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போனதும் பாலையும், கறிவேப்பிலையையும் சேர்த்துக் கிளறுங்கள். சுருண்டு, கெட்டியாகும்வரை கிளறி இறக்குங்கள். நாவுக்கு ‘சுள்ளென்று’ இருக்கும், இந்த சுரைக்காய் மசாலா!
நன்றி: ‘சமையல் திலகம் ‘ரேவதி சண்முகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக