சனி, நவம்பர் 19, 2011


 முதுகு வலியும்!! மருத்துவமும்!!

 
 
 இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.

நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.

சியாடிக்கா என்றால் என்ன? நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.

முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.

ஆயுர்வேதத்தில் ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.
அறிகுறிகள்

‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.

இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.

அதனால் ஏதோ சுளுக்கு என்று நாம் அலட்சியமாக இருக்க நேரிடும். ஊசிகுத்தும் வலி, சிறுநீர் போவதை “கன்ட் ரோல்” செய்ய முடியாமல் போதல், இவை இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காலை நீட்டினால் வலி, நடந்தால், மாடி ஏறினால் வலி என்றிருந்தால், ஸியாடிகாவாக இருக்கலாம்.

காரணங்கள்:
• முதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும்.

இதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.

• ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.

• சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும்.

• ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.

வீட்டு வைத்தியம்:
• விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

• பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.

• புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

• சூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

• விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.

• ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.
ஆயுர்வேத அனுபவம்

முதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.

இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.

முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.
மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.

ஒரு நாள் எண்ணெய்யை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.

உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இதர வழிகள்:
1. முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.

2. குப்புற படுக்கக் கூடாது.

3. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.

4. நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.

5. உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.

6. இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.

7. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.

8. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.

9. படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.

10. நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

11. பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.

12. தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.

13. தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.

14. கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.

15. உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.

16. பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

17. முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.

உணவு முறை:
• குளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.
• பழைய உணவுகளை தவிர்க்கவும்.
• கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.
• எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.
• இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
• இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.
• இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.
• இஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக