திங்கள், டிசம்பர் 05, 2011

சிறுதொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம்!

சம்பளத்துக்காக பணியாற்றுபவரை விட சுயதொழில் செய்பவர்கள்தான் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைவதுடன், சுதந்திரமாகவும் வாழ்கின்றனர்.  ஆதலால்தான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் படிப்புக்கு பின்னர் எந்த வேலைக்கு செல்லப்போகிறீர்கள் என்று கேட்டால் சுயமாக தொழில் தொடங்கி முன்னேறுவதுதான் எங்களுடைய குறிக்கோள் என்பர்.  சோம்பேறிகளுக்குதான் படிகள் தடைகளாகத் தெரியும்.  திறமைசாலிக்கோ தடைகளும் படிகளாக மாறும்.  ஒரு செயலை விடாமுயற்சியுடன் நாம் செய்யும் போது வெற்றி நிச்சயம்.  ஆதலால்தான் முயற்ச்சி திருவினையாக்கும் என்றார்கள் நம் முன்னோர்கள்.  இன்றைய இளைஞர்களில் பலர் விவசாய பணிகளில் தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி, உழைக்கும் எண்ணம் மாறி, கம்ப்யூட்டர் முன்பு தவம் கிடக்கும் பணிகளைதான் விரும்புகின்றனர்.

தொழில் தொடங்கி 10 பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு, வசதிகள் இருந்த போதிலும், அவர்கள் ஏதாவது சிறு தொழில் தொடங்காமல் அலுவலக பணிகளை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதால்தான் சாதாரண வேலைக்குகூட இன்று அதிக அளவில் போட்டி நிலவுகிறது.  இதனால்தான் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாகிவிட்டது.  இந்த சூழ்நிலையை மாற்ற நினைத்தால் ஜெயிக்க ஆயிரம் வாய்ப்புகள் உங்கள் கண் முன்தெரியும்.  ஆம் சுயதொழில் தொடங்கியும் சாதிக்கலாம்.
நிதி நெருக்கடி, போட்டியாளர்களின் விலைக்குறைப்பு, தொழிலாளர் பிரச்சினை, கச்சாப்பொருட்கள் தட்டுப்பாடு, இயந்திர கோளாறு, திடீர் விற்பனை சரிவு என்பது போன்ற பல்வேறு பிரச்சினைகள் அடுக்கடுக்காக உருவாகலாம்.  தொழில்கள் என்றால் இடர்கள் இல்லாமல் இருப்பதில்லை அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் தொழில்புரிபவர்களுக்கு அவசியம் தேவை.  ஆரம்பத்தில் சிறிய முதலீட்டுடன் தொடங்கிய பின்பு அந்த தொழிலில் உள்ள நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்து தொழில் சார்ந்த அனுபவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  இந்த முதற்கட்ட பரீட்சையில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு தொழிலில் கைபிடித்தம் இல்லாமல் லாபம் பார்த்துவிட்டால், நிர்வாகத்திறமை வந்துவிட்டது என்று அர்த்தம்.  பின்னர் காலத்திற்கு தகுந்தபடி உங்கள் தொழிலின் வளர்ச்சியை அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.  தொழிலில் சாதிக்க வேண்டுமானால், அடிக்கடி சந்தை நிலவரங்களை கண்காணிக்க வேண்டும்.  தொழிலில் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்படும் போது இடையூறுகள் அதிகமாக வரும்.  அந்த சமயத்தில் மன உறுதியுடன், சமாளிக்கும் மனப்பக்குவமும் வேண்டும்.
பொறுப்புணர்வு, வியாபார உத்தி, விற்பனை முன்னேற்றம், வாடிக்கையாளர்களிடமும் சுமூக உறவு, முடிவெடுக்கும் தன்மை, நெருக்கடியான சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்படும் தன்மை போன்ற பண்புகள் உங்களை சிறந்த தொழில் அதிபராக மாற்றும்.  சிறு தொழில் என எண்ணாமல் கடினப்பட்டு, விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நமதே.

by



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக