புதன், டிசம்பர் 21, 2011

வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டு, போய் ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று எழுந்து செல்பவரா நீங்கள்? சற்றுப் பொறுங்கள். அதற்கு முன் இந்தக் கட்டுரையை படியுங்கள். சிகரெட் நுனியில் நீங்கள் பற்ற வைக்கும் தீ, நீங்கள் உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ என்பது புரியும்.

முதலில் சில புள்ளிவிவரங்கள்.
உலகம் முழுவதும் தற்போது 110 கோடி பேருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. 2025வாக்கில் இந்த எண்ணிக்கை 160 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகில் 1 கோடி சிகரெட்கள் வாங்கப்படுகின்றன.
பதின் வயதில் இருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் 13 வயதிலேயே புகைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
சிகரெட்டில் இருக்கும் நிகோடின் மட்டும்தான் உடலுக்குத் தீமை விளைவிக்கும் ரசாயனம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிகோடின் தவிர சிகரெட் புகையில் தாரும் இருக்கிறது. இந்தத் தார் சுமார் 4,000 ரசாயனங்களைக் கொண்டது. சயனைடு, பென்சீன், ஃபார்மால்டிஹைடு, அசிட்டிலின், அம்மோனியா போன்ற இந்த ரசாயனங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை. நுரையீரல், இதயம், எலும்பு, தோல் ஆகியவற்றில் நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டவை. 
உட்கார்ந்து யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும்.
1.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும். 1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க. 2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை பிடித்துக்கொள்ளவும்.
2.சிகரெட்டை நிறுத்த மருந்துகள்  வந்துள்ளன. அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க ஆரம்பித்துவிடும். அப்புறம் கொள்கையெல்லாம் காற்றில்பறது விடும்.
3.குடும்ப, அலுவலக,உறவுகள் இப்படி ஏதாவது ஒரு  சிக்கலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிகரெட் பயன்படுத்துகிறோம். சிகரெட்டை விட்டுவிட்டல் வேறு ஏதாவது ஒன்றை அந்த இடத்தில் வைக்கவேண்டும். சிலர் புளிப்பான மிட்டாய், கடலைமிட்டாய், இசை கேட்டல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.( பாக்கு,பான்பராக் என்று போய்விடவேண்டாம்!!!)
4.பெரும்பாலும் மது அருந்தும்போது சிகரெட் பற்ற வைப்பது அதிகம். அதேபோல் உணவு உண்டவுடன் சிகரெட் புகைப்பர். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் மிக அவசியம்.
5.புகைப்பதை நினைவுப்படுத்தும் சாம்பல் தட்டு, லைட்டர் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் அறையிலிருந்து அந்த வாடையை துரத்திவிடுங்கள். இதற்கு அறையில் நறுமணம் கமழும் பத்தி போன்றவற்றை உபயோகிக்கலாம்.
6.சிகரெட் ஞாபகம் வரும்போது என்ன செய்யலாம்? ஏதாவது வேறு வழியில் சிந்தனையைத் திருப்ப வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம், நாயைக்கூட்டிக்கொண்டு ஒரு வாக்கிங் போகலாம். தோட்டத்தில் புற்களைப் பிடுங்கலாம். இப்படி ஏதாவதொன்றில் திளைத்துவிடுங்கள்.
7.நிறைய காய்கறிகள், பழங்களை உண்ணவும். இவை சிகரெட்டை நிறுத்த உதவுகிறதாம்.
8.உங்கள் மருத்துவரை அணுகவும். ஏனென்றால் சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின் நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை.
9.சிகரெட்டை நிறுத்த பல பொருட்கள் தற்போது கிடைக்கின்றன.
      நிகோடின் பாட்ச் (nicotine patch), ஸ்பிரே,உறுஞ்சு குழல், நாக்கினடியில் வைக்கும் மாத்திரை போன்ற பல உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.
நினைவில் கொள்ளுங்கள்,ஐந்து மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரெட்டால் இறக்கிறார்கள்!!

by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக