திங்கள், டிசம்பர் 05, 2011

வால் ஸ்ட்ரீட் – ஆட்டங்காணும் அமெரிக்கா


அமெரிக்காவின் பொருளாதார மய்யம் “வால் ஸ்டீரீட்” எனும் நியூயார்க் நகரத் தெருவில் அமைந்துள்ள பொருளாதார நிறுவனங்கள். உலகின் பொருளாதார நாடித்துடிப்பே அங்கே உள்ளது என்று கூறலாம். அதை ஏன் முற்றுகையிட வேண்டும்?



கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரிய மாற்றத்தை அடைந்துவிட்டது. அதன் பலன் பலரைப் பொருளாதாரச் சீரழிவில் தள்ளிவிட்டது. அதில் பாதிக்கப் பட்டவர்களின் சீற்றந்தான் இந்த முற்றுகைப் போராட்டம்.
உலகெங்குமே பொருளாதாரச் சீரழிவு நடந்து வருகிறதே, பின் ஏன் இந்தப் போராட்டம்? யார் நடத்துகிறார்கள், யாருக்கு எதிராக நடத்துகின்றார்கள்?
அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி அனைவரையுந்தானே தாக்கியுள்ளது. பின் என்ன ஆத்திரம்? இங்கேதான் முடிச்சு அவிழ்கின்றது.
அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி அனைவரையும் தாக்கியுள்ளதா? இல்லை! அதுதான் இந்தப் போராட்டத்தின் அடித்தளம்.
மேல்தட்டில் உள்ள ஒரு விழுக்காடு மக்கள் பெரும்பொருள் அடைந்துள்ளனர். மீதி 99 விழுக்காடுதான் வீழ்ச்சியடைந்துள்ளது. அதுதான் ஆத்திரத்தின் காரணம்.
ஒருவர் வேலை இழந்தால் அவர் குடும்பம் வேதனைப்படும். தெருத் தெருவாக, ஊர் ஊராகப் பலர் வேலை இழந்தால் என்ன ஆகும்?அமெரிக்காவின் கார் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் டெட்ராயிட். அங்கே பல தெருக்கள் பூராவும் மக்கள் வீட்டுக் கடன் அடைக்க முடியாமல் வீட்டைவிட்டு ஓடிவிட்டனர்.
அந்த நகர மேயர் அந்தக் கட்டிடங்களை இடித்துத் தள்ளிவிட்டு அங்கே மீண்டும் சோளம் விளைவிக்கலாம் என்றுகூடச் சொல்லியிருக்கின்றார். நான் அமெரிக்காவிற்கு 1971இல் வந்தேன். இது மாதிரி ஒரு மோசமான பொருளாதார வீழ்ச்சியை, வேலை இழந்து வாடும் துன்பத்தைப் பார்த்ததில்லை. மேலே போகும், கீழே போகும் ஆனால் எப்படியும் நிமிர்ந்துவிடும். இன்று அந்த நம்பிக்கையே போய்க் கொண்டிருக்கின்றது. அதுதான் இந்தப் புரட்சிக்குக் காரணம்.
இதில் மிகவும் கோபம் அடைய என்ன காரணம் என்றால், இது யாரால் நிகழ்ந்ததோ அவர்கள் தண்டிக்கப்படாமல் அவர்களுக்கு அரசின் பெரும் பண உதவி தரப்பட்டு அவர்கள் பெரிய செல்வக் கோமான்கள் ஆனதுதான்.
பெரிய வங்கிகள், வங்கிகள் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்யாமல் பெருந்தொகையைச் சூதாட்டம் போல பெரும் இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற போட்டியில் வெறித்தனமாக விளையாடித் தோற்றது தான். யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்கின்றார்கள் என்ற கணக்கே தெரியாமல் பெரிய கடன் வலை பின்னப் பட்டுவிட்டது. ஒரு வீடு வாங்கியவர் அந்த வீட்டுக் கடனை அடைக்காமல் அதன் விலை ஏறியதால் அதன் மேல் மீண்டும் கடன் வாங்கி இன்னொரு வீடு வாங்க வேண்டியது. எந்த முதலீடும் இல்லாமல் வெறும் வட்டி மட்டுங் கட்டுகிறேன் என்று கடன் வாங்கி வீடுகள் வாங்கினார்கள்.
கடன் கொடுப்பதற்குப் போட்டிக்கு மேல் போட்டி ! திருப்பித் தர முடியுமா என்ற கேள்விகூட எழவில்லை! .கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்க முடியாமல் போனபோது முதலில் யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்தார்கள் என்ற சிக்கலே அவிழ்க்க முடியாத புதிராகி விட்டது. அந்தப் பெரும் வங்கிகள் மூழ்கினால் பெரும் பொருளாதாரச் சீரழிவு நாட்டையும் ஏன் உலகத்தையுமே பாதிக்கும் என்று அமெரிக்க அரசு அவர்களைக் காப்பாற்றியது. இந்தத் தவறுகள் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், ஒரு நூறு பேராவது சிறையிலடைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்த போது அவர்கள் அனைவரும் தப்பவிடப்பட்டனர். அவர்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை விலைக்கு வாங்கித் தப்பித்து விட்டனர்.
ஒருவர்கூடத் தண்டிக்கப்படவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அதில் பலர் பல மில்லியன்கள் கொடுத்து ஓய்வெடுக்க வைக்கப்பட்டனர் ! இப்போது அமெரிக்காவின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறதென்றால் மேல் தட்டில் உள்ள ஒரு விழுக்காட்டுச் செல்வந்தர்கள் நாட்டின் 40 விழுக்காடு செல்வத்தின் உரிமையாளர்கள். கடந்த முப்பது ஆண்டுகளில் 90 விழுக்காட்டு மக்களின் ஆண்டு வருமானம் 900 டாலர்கள் குறைந்துள்ளது. ஆனால், மேல் தட்டு ஒரு விழுக்காட்டு மக்களின் ஆண்டு வருமானம் 7,50,000 டாலர்கள் கூடியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் இரண்டாம் நாள் பவுலிங் கிரீன் என்ற ஊரிலே பன்னிரெண்டு பேர் கூடி இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள். கனடா அமைப்பு ஒன்றும் எப்படிப் போராடுவது என்று ஆலோசித்தது. செப்டம்பர் 17இல் புரட்சி வெடித்தது. அமெரிக்க நியூயார்க் நகரிலேயும் மற்றும் பல ஊர்களிலும் போராட்டம் தொடங்கியது.
பின்னர் வால் ஸ்டீரீட் முற்றுகை என்று பெயர் பெற்றது.
நியூயார்க் பொது அமைப்பு என்று பொதுவான கூட்டங்களில் பொதுவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன். ஒரு தனி நிறுவனத்தின் பார்க் தலைமை போராட்டக் களமாக அமைந்தது. அதைச் சுத்தப்படுத்த வேண்டும் வெளியேறுங்கள் என்ற போது ஆயிரக்கணக்கானவர்கள் நாங்களே சுத்தப்படுத்திக் கொள்கின்றோம் என்று சுத்தப்படுத்திக் கொண்டு காவல் துறையை அனுமதிக்கவில்லை. பல நல்ல பெரிய சமையல்காரர்கள் அங்கே சாப்பாட்டைக் கவனித்துக் கொண்டனர். இரவு பகலாகப் போராட்டம் நடக்கின்றது. நியூயார்க் நகர காவல் துறை அவர்களை எப்படியும் வெளியேற்ற வேண்டும் என்று முயற்சி செய்கின்றது, முடியவில்லை.
அமெரிக்காவில் பல நகரங்களிலும் உலகெங்கும் இதுவரை 82 நாடுகளிலும், 900க்கும் மேற்பட்ட நகரங்களிலும் இப்போது போராட்டங்கள் நடந்துள்ளன.
இன்னும் வளர்ந்து கொண்டுள்ளன. பலதரப்பட்ட மக்களும், அந்த ஒரு விழுக்காட்டுப் பணக்காரர்களிலே சிலருங்கூடப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பல துறை வல்லுநர்களும், நடிகர், எழுத்தாளர் என்றும் கல்லூரி, உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் என்று பலரும் பங்கேற்று வருகின்றனர்.
அவர்கள் வேண்டுகோள்கள் வைக்க விரும்பவில்லை. நடந்த அநியாயங்களை விசாரித்துத் தண்டிக்க வேண்டும். பெரும் பணக்காரர்களும், பெரும் நிறுவனங்களும் உரிய வரி கட்டாமல் ஏமாற்றுவது தடுக்கப் பட வேண்டும், அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும், வேலை வாய்ப்புகள் வேண்டும் என்ற பொதுவான வழியில் சிந்தித்து வருகின்றனர். பலர் ஆதரவளித்துள்ளனர். பெரும்பாலும் அமைதியாக நடந்தாலும் ஆயிரக்கணக்கில் இது வரை கைது செய்து விடப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பெரிய கப்பல் துறைமுகமான கலிபோர்னியாவின் ஓக்லேண்ட் துறைமுகம் மூடப்பட்டு வன்முறை வெடித்துள்ளது. உலகின் பல நாடுகளிலும் இந்தியாவிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம் எங்கு செல்லும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. அனைத்துத் தலைவர்களும், அண்மையில் கேன்சு, பிரான்சில் நடந்த 20 நாட்டு மாநாட்டில் பல தலைவர்களும் பிரச்சினையை ஒப்புக் கொண்டுள்ளனர்.
என்ன செய்யப் போகிறார்கள் என்பது இனிதான் தெரியும்.
நன்றி: உண்மை (நவம்பர் 16-31) – வால் ஸ்ட்ரீட்டிலிருந்து சோம்ரோ

by

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக