இந்தியாவில் கூகுள், பேஸ்புக்குக்கு தடை?
சமூக வலைதளங்களில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கத் தவறினால்
சீனாவைப் போன்று இந்தியாவிலும் கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவை
மூடப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமானவைகள் போஸ்ட் செய்யப்பட்டு
வருகின்றன. இதை எதிர்த்து வினய் ராய் என்ற பத்திரிக்கையாளர் டெல்லியில்
உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் கூகுள், பேஸ்புக் உள்பட 21 இணையதளங்கள் மீது அவர் குற்றம்
சாட்டியிருந்தார். அதை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டது. இதை எதிர்த்து கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி
உயர்நீதிமன்றத்தை அணுகின.
இந்த மனுக்கள் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் கெய்ட்
முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது பேஸ்புக் இந்தியா மற்றும்
கூகுள் இந்தியா நிறுவனங்களின் சார்பில் அவர்களது வக்கீல்கள் ஆஜராகினர்.
மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சண்டியோக் ஆஜரானார்.
அப்போது கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் வக்கீல்கள் வாதிடுகையில்,
பல லட்சம் பேர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில்
சிலர் ஆபாச செய்திகளைப் போட்டு விடுகின்றனர். அவற்றைத் தனித் தனியாக
கண்காணித்து நீக்க முடியாது. அது சாத்தியமும் அல்ல. மனுதாரர் குறிப்பிட்ட
புகார் எதையாவது கூறினால் அதை எங்களது அமெரிக்க தலைமை நிறுவனத்திடம்
சொல்லி நீக்க முயற்சிப்போம் என்றனர்.
இதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது
குறுக்கிட்ட நீதிபதி கெய்ட், வலைதளங்கள் அவற்றில் உள்ள ஆட்சேபனைக்குரிய
கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு உடனடியாக செய்யவில்லை
என்றால் சீனாவைபோல பேஸ்புக், கூகுள் இணைய தளங்களை தடை செய்ய நேரிடும்
எனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கீழ் நீதிமன்ற விசாரணைக்குத் தடை
விதிக்கவும் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக