அமெரிக்க ராணுவ வீரர்கள் வக்கிரம் : வீடியோ காட்சியால் அம்பலம்
வாஷிங்டன் : ஆப்கனில் நடந்த தாக்குதலில் அங்கு கொல்லப்பட்ட தலிபான் போராட்டக்காரர்களின் ரத்தம் தோய்ந்த சடலத்தின் மீது, அமெரிக்க ராணுவ வீரர்கள் சிறுநீர் கழித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் வக்கிரமான வீடியோ காட்சி வெளியாகியிருக்கிறது. இது, உலகத்தின் பல நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தலிபான் போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில், 20 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் களமிறக்கப்பட்டனர். அவர்கள் காந்தகார் மற்றும் ஹெல்மாண்ட் மாகாண பகுதிகளில் தலிபான்களை வேட்டையாடினர். தற்போது, ஆன்-லைன் வீடியோ காட்சி, அமெரிக்க ராணுவ வீரர்களின் அட்டகாசத்திற்கு, அவர்கள் வக்கிரத்திற்கு ஒரு சாம்பிளாக வெளிவந்திருக்கிறது. அதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த தலிபான் வீரர்கள் சடலம் மீது, மகிழ்ச்சி களிப்பில் சிறுநீர் கழிப்பது அப்படியே ஒளிபரப்பப்பட்டது. அதில் ஒரு அமெரிக்க வீரர், "நமக்கு ஆனந்தம் தரும் நாள்' என்று எக்காளமாகக் கூறுவதும் வெளியாகியிருக்கிறது. இது, உலகெங்கும் உள்ள பலரை முகஞ்சுளிக்க வைத்தது. இஸ்லாமிய நாடுகள் கொதிப்படைந்தன. ஆப்கன் அதிபர் கர்சாய் கூறுகையில், "இக்காட்சி எங்களுக்கு மன உளைச்சலைத் தந்திருக்கிறது. இறந்தவர்கள் சடலத்தை அவமானப்படுத்தும் இச்செயல் மனிதாபிமானம் அற்றது' என்றிருக்கிறார். தலிபான் அமைப்பு தகவல் தொடர்பாளர் முஜாகீது கூறுகையில், "இது காட்டுமிராண்டித்தனமானது. கடந்த 10 ஆண்டுகளில் இம்மாதிரி எத்தனையோ சம்பவங்கள் அரங்கேறியுள்ளன' என்று அதிருப்தி தெரிவித்தார். அமெரிக்க அரசும் இச்சம்பவத்தை அறிந்து அதிர்ந்திருக்கிறது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தகவல் தொடர்பாளர் கேப்டன் ஜான் கிர்பி கருத்து தெரிவிக்கையில், "இதை யார் செய்திருந்தாலும் அது மிகத் தவறானது. ராணுவத்தைச் சார்ந்தவர்கள் இம்மாதிரி செயலில் ஈடுபடக்கூடாது. இவ்விஷயத்தை முழுவதும் விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
நன்றி : http://www.dinamalar.com
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக