போதையில் எனும் கொடிய அரக்கன்.
மக்கள் சமுதாயத்திற்கும்,
ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாகிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சனைதான் இந்த
போதைப்பொருட்கள். போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா
வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன.
தன் சிந்தனையை போதையில் புதைத்து மன
மயக்கத்தையும், குழப்பத்தையும் தன்னைத்தானே மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான்.
போதைப் பொருட்களில் மது, ஹெராயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, புகையிலை, பான் மசாலா,
போதை தரும் இன்ஹேலர்கள் இன்னும் பல வகைகள் அடங்கும்.
பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிகளிலோ
படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும் மற்றும் பொழுதுபோக்காகவும்
பழகியக் கொண்ட பழக்கத்தை இன்று வரை விட்டு மீளமுடியவில்லை என வருத்தப்பட்டுக்
கொள்பவர்களும் இருக்கிறார்கள். பலமுறை இத் தீய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் என
முயற்சி எடுத்து தோற்றுப் போனவர்களும் இருக்கிறார்கள். ஒன்றைத் தவிர்க்க மற்றொன்றை
பயன்படுத்தி அதையும் சேர்த்து அடிமையாகிக் கொண்டவர்களும் இருக்கின்றனர். கடின வேலை
செய்பவர்கள் தங்கள் உடல் வலி மறந்து இருக்கவும் போதையைப் பயன்படுத்துகிறோம் என்று
கூறுகிறார்கள். நிச்சயம் ஒரு நாள் மரணம் உண்டு, இதை விட்டு ஒழித்தால் மட்டும்
மரணமின்றி வாழ்ந்துவிடலாமா? என தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டு தொடர்பவர்களும்
இருக்கிறார்கள்.
இத்தகைய போதைப் பொருட்களுக்கு
அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு,
உறவினர்கள் மற்றும் தொடர்புகள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது.
போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே
சிதைந்து சீரழிந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும்
வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுகின்றது.
எல்லோருக்கும் எளிமையாகவும்,
பரவலாகவும் கிடைத்துவிடும் போதைப்பொருள்தான் சாராயம் மற்றும் அதைச் சார்ந்த மது
வகைகள். இந்தப் பழக்கம் தற்போது பள்ளிப் பருவத்திலேயே பலரும் பழகிக் கொண்டிருப்பதை
கண்கூடாகக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் அரசே ஆங்காங்கே அமைத்திருக்கும்
டாஸ்மாக் மதுக்கடைகளும், இதற்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும், திரைப்படங்கள்
இத்தகைய பழக்கம்; இளைஞர்கள் செய்வது தவறில்லை என்று சித்தரிப்பதும், மகிழ்ச்சி
மற்றும் துக்க வேளைகளில் மது தேவை என்ற மனோநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
மது பரிமாறல்கள் மேலை நாட்டுக்
கலாச்சாரம் என உயர்வாகக் கருதுவதும் இப்பழக்கத்திற்கு ஒரு காரணமாகும். பிரச்சனைகள்
மற்றும் குறைகளை போதைப்பழக்கத்தால் மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்று தவறாகக்
கருதுவதும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு மக்களை ஆட்படுத்திவிடுகின்றது. தன்னைச்
சுற்றியுள்ளவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் அவரைத் திருத்த
முயற்சிக்காமல் அவர்களிடமிருந்து சிறிது சிறிதாக தாங்களும் கற்றுக் கொள்கின்ற பலரும்
இருக்கிறார்கள்.
இளம் வயதில் பழகிக் கொள்ளும்
இத்தகைய போதைப் பழக்கங்கள் மெல்ல மெல்ல இவர்களை அடிமையாக்கி விடுகிறது. போதைப்
பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும்
நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செய்கின்றது. இதன் காரணமாக சீரான
இதயத்துடிப்பு பாதிக்கப்படுட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும்
இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள்.
உடல் சோர்வடைதல், குற்ற உணர்ச்சி, தனிமையை நாடுவது போன்ற அவல நிலைக்கு
உள்ளாகின்றார்கள். போதைப் பொருட்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்,
சமுதாயம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என பலவகையான தீமைகளை
அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
உலக நாடுகள் எல்லாம் போதைப்
பொருட்கள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு கட்டுப்படுத்தி வருகின்றன.
இருப்பினும் ஹெராயின், கஞ்சா போன்ற பொருட்களை விற்பதும் பிற நாடுகளுக்கு கடத்துவதும்
இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. கல்லூரி வாசல்களிலேயே கஞ்சா
சாக்லேட்கள் விற்கப்படுவதும், விற்பவர்கள் கைது செய்யப்படுவதும் பத்திரிக்கைகளில்
படிக்க நேரிடுகின்றது. சுற்றுலாத்தலங்கள் அருகாமையில் சிதறிக்கிடக்கும் மதுக்
குப்பிகளும், ஊசிகளும் பலரும் போதைக்கு அடிமையாகிக் கொண்டிருப்பதற்குச் சான்று
பகர்கின்றது.
உலக மருத்துவ அறிக்கையின்
புள்ளிவிவரப்படி உலகில் 2 கோடி பேர் ஹெராயின் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்
ஆவார்கள். அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் தற்போது மேற்கத்திய நாடுகளில் போதைப்
பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை சதவிகிதத்தின் அடிப்படையில் குறையத்
தொடங்கியுள்ளது. ஆனால் ஆசிய நாடுகளில் போதைப்பொருள் அடிமைகள் அதிகமாகிக்
கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுகள் நம்
நாடுகளில் இல்லாமல் போனதுமாகும்.
போதைக்கு எதிராக பல தன்னார்வ
தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. ஆரோக்கியம்
என்பது இறைவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரும் அருட்கொடை ஆகும். நம் உடல்
ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கிழைத்துக் கொள்வது பாவமான செயலாகும். இறை நம்பிக்கையில்
மனதைச் செலுத்தி இத்தீய பழக்கம் குறித்து மறுமையில் வினவப்படுவோம் என்று பயப்படுவோர்
மட்டுமே இதிலிருந்து முற்றிலும் விடுபடமுடியும். நாம் செய்ய வேண்டியது இது போன்ற
போதைப் பழக்கங்களிலிருந்து விலகி இருப்பது மற்றும் இது குறித்த விழிப்புணர்வுகளை
மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் ஆகும்.
போதை என்பது தனிமனிதனை மட்டும்
பாதிக்கும் பழக்கம் என எண்ணிவிட இயலாது. இதனால் அவரைச் சுற்றியுள்ள சமுதாயமும்
பாதிப்படைகின்றது.
படிக்கும் வயதில் போதையைப்
பயன்படுத்தினால் தம்முடைய படிப்பும் கெட்டு, தன்னோடு பழகும் சக நண்பர்களின்
படிப்பையும் பாழ்படுத்திவிடுவது.
பணிபுரிபவர்கள் போதைக்கு
அடிமையானால் அலுவலக வேலையை இழந்து, தம்முடைய பொருளாதாரத்தை இழந்து குடும்பத்தை
வறுமையில் கொண்டு சென்றுவிடுதல், குடும்ப மகிழ்ச்சி மற்றும் சமூக அந்தஸ்தை இழத்தல்
வாகனம் ஓட்டுபவர்கள் போதையைப்
பயன்படுத்துவதால் கவனம் சிதைந்து விபத்துக்களுக்கு உள்ளாகி உயிர் இழப்புகளை
ஏற்படுத்துவது.
சிறிது சிறிதாக
போதைப்பழக்கமானது அதிகரித்து அந்த அற்ப இன்பத்தைப் பெற்றுக்கொள்ள திருடுதல், பொய்
பேசுதல் மற்றும் மானக்கேடான விஷயமாக இருந்தாலும் அதைச் செய்யத் துணிந்துவிடும் நிலை
ஏற்பட்டுவிடுகின்றது.
போதையின் கோரப்பிடியில்
அகப்பட்டவர்கள் அஞ்சாமல் பாலியல் குற்றங்களிலும் ஈடுபட்டு அதன் மூலம் பல நோய்களை
ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
"போதைக்கு அடிமை" என்பதை
கீழ்கண்ட விஷயங்களால் அறிந்து கொள்ளலாம்.
1
ஆரம்பத்தில் பயன்படுத்திய அளவைவிட சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்லுதல்.
மற்றும் அடிக்கடி போதை வேண்டுமென்று தோன்றுதல்.
2
எதை இழந்தாலும் தனக்கு போதை தரக் கூடிய பொருளை அந்தந்த நேரத்தில் தனக்குக்
கிடைக்கும் விதமாக பார்த்துக் கொள்ளுதல். அல்லது அதை முன்னரே வாங்கி வைத்துக்
கொள்ளுதல்.
3
இப்பழக்கத்தை இன்றோடு விட்டுவிட வேண்டும் என்று சபதம் ஏற்றும் பல முறை தோல்வியடைவது.
4
தனக்கு போதை தரக்கூடிய பொருளை அடைய கேவலமான செயல்களைக் கூட செய்யத் துணிவது.
5
நன்றாக படிக்கக்கூடிய பதினைந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் மதிப்பெண்கள்
திடீரென குறையத் தொடங்குகின்றது எனில் அவர்களின் நண்பர்கள் வட்டாரத்தைக் கவனியுங்கள்.
6 உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
7
செயல்பாடுகளிலோ அல்லது உரையாடல்களிலோ ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதை
கவனியுங்கள்.
8
அவர்களுடைய தனிமை அறையில் யாரும் நுழைவதைத் தடுக்கிறார்களா?
9
அடிக்கடி பணம் கேட்கிறார்களா? உண்மையான தேவைதானா என்பதை கண்டறியுங்கள். படிக்கும்
காலத்தில் அளவிற்கு அதிகமாக பணம் கேட்கிறார்களெனில் ஏதோ பிழையிருக்கலாம் என
கணியுங்கள். இத்தகைய செயல்கள் உங்கள் குழந்தைகளிடம் இருந்தால் அவர்களை கவனித்து
போதைக்கு அடிமையாவதிலிருந்து தடுத்து நிறுத்துங்கள்.
போதைக்கு அடிமையானவர்களை
அப்பழக்கத்திலிருந்து மீட்க எத்தனையோ மறுவாழ்வு மையங்கள், அலோபதி, ஆயுர்வேதா,
சித்தா என எத்தனையோ மருத்துவ முறைகளும் இருக்கின்றன. எனினும் யார் இறை நம்பிக்கையில்
தன் மனதைச் செலுத்தி இது பாவம் என எண்ணி கைவிடுகின்றாரோ அவர்களால் மட்டும் தான்
இத்தகைய பழக்கங்களிலிருந்து மீள்வது சாத்திமாகும்.
by
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக