வியாழன், டிசம்பர் 20, 2012

பிளஸ் 2 படிக்காமல், பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசு வேலைக்கு ஏற்பு: அரசு உத்தரவு







பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களில், பட்டப்படிப்பு படித்தவர்கள், அரசு வேலைக்கு தகுதியானவர்களாக ஏற்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு வேலை வாய்ப்புகளை பெற, 10ம் வகுப்பு, பிளஸ் 2, அதன்பின், பட்டப்படிப்புகள் என்ற வரிசையில், கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.ஆனால், பெரும்பாலானோர், பிளஸ் 2 படிக்காமல், நேரடியாக, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்புகளை முடித்து, அரசுப் பணிகளில் உள்ளனர்; அதேபோல் பலர், அரசுப் பணிக்காக, காத்திருக்கின்றனர். நிர்ணயித்த கல்வி வரிசையில் இல்லாமல், மாறி, மாறி, பல்வேறு கல்வித்தகுதிகளை பெற்றவர்களும், அதிகளவில் இருக்கின்றனர்.பத்தாம் வகுப்பிற்குப் பின், பிளஸ் 2 படிக்காமல், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியில்லாதவர்களாக உள்ளனர்.இதுபோன்ற நிலையில், மேற்கண்ட வரிசையில், கல்வி தகுதிகளை பெற்றவர்களை, முறையான வரிசையில், கல்வி தகுதி பெற்றவர்களுக்கு இணையாக ஏற்று, அரசு வேலை வாய்ப்பு பெறவும், பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம், உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:
* பத்தாம் வகுப்பிற்குப் பின், மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு படித்து, பின், திறந்தவெளி பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் பட்டப் படிப்பு படித்தவர்கள்...
* பழைய எஸ்.எஸ்.எல்.சி., (11ம் வகுப்பு) படித்து, அதன்பின், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து, பின், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு - ஐ.டி.ஐ., - தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள்...
* பத்தாம் வகுப்பு, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள்...
மேற்கண்ட படிப்பை படித்தவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பின், 3 ஆண்டு பட்டப்படிப்பு பெற்றவர்களுடன் இணையாக கருதி, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அங்கீகரித்து, தமிழக அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் மூலம், அரசுப் பணிகளில் ஏற்கனவே இருப்பவர்கள், பதவி உயர்வு பெற, பெரிதும் வழிவகுக்கும். மேலும், பிளஸ் 2 படிக்காமல், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர் வேலை பெறவும் வழி பிறந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக