தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
'ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை'
ஊக்கம் உடையா னுழை'
அதாவது சோர்வு இல்லாத ஊக்கம்
உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக்கேட்டுக் கொண்டு
போய் சேரும் என்ற குறள்படி, ஊக்கத்துடன் செயல்படும் ஒவ்வொரு இளைஞரையும்
தொழில் முனைவோராக உருவாக்குவதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான
அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
படித்த
இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் 'புதிய
தொழில் முனைவோர், தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம்' என்ற புதிய திட்டத்தை
2012-13 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார். இதன்படி, படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி
அளிக்கப்பட்டு, தொழில் தொடங்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு,
நிதிநிறுவனங்களில் நிதியுதவி பெற உதவுவதுடன், பெரும் தொழில் நிறுவனங்களுடன்
அவர்களுக்கு வணிகத் தொடர்பும் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் 25 லட்சம்
ரூபாய்க்கு மிகாத 25 விழுக்காடு முதலீட்டு மானியமும், மூன்று விழுக்காடு
வட்டி குறைப்புடன் கூடிய கடனும் பெற உதவி செய்யப்படும்.
ஒவ்வொரு
ஆண்டும் இத்திட்டத்தின் கீழ் 1,000 தொழில் முனைவோருக்குப் பயிற்சி
அளிக்கப்படும். இதில் ஆதிதிராவிட இன பயனாளிகளுக்கு 18 விழுக்காடும்,
பழங்குடியின பயனாளிகளுக்கு 1 விழுக்காடும், மாற்றுத் திறனாளிகளுக்கு 3
விழுக்காடும், மகளிருக்கு 50 விழுக்காடும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தினை
செயல்படுத்த 100 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் முதல் தவணையாக 51 கோடியே 80 லட்சம்
ரூபாய் நிதியினை விடுவித்தும் ஆணை பிறப்பித்துள்ளார்கள். இந்தத்
திட்டத்தினை செயல்படுத்துவதில் தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனமும்,
தமிழ்நாடு முதலீட்டு கழகமும் முக்கிய பங்கு வகிக்கும்.
தொழிற்பேட்டைகள்
நன்கு பராமரிக்கப்பட்டால்தான் அங்கு செயல்படும் தொழில் நிறுவனங்கள் நன்கு
செயல்பட்டு உற்பத்தியை பெருக்க இயலும். அதுமட்டுமல்லாமல், புதிய
நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்க தொழிற்பேட்டை நிர்வாகத்தை அதிக
அளவில் அணுகும் நிலையும் ஏற்படும்.
இதனைக் கருத்தில்
கொண்டு திருவள்ளூர் மாவட்டம் காக்களுர் மற்றும் சென்னை பெருங்குடியில்
அமைந்துள்ள மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டைகளில் சாலைகளை
வலுப்படுத்துதல், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை சீர்செய்தல்,
மழைநீர் வடிகால் வசதிகளை செய்தல் மற்றும் தெரு விளக்குகள் பொருத்துதல்
உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு 1 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள்
உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள்,
படித்த இளைஞர்கள் அதிக அளவில் சொந்தத் தொழில் தொடங்க முன்வந்து, தொழில்
முனைவோராக வாழ்வில் ஏற்றமடைய வழிவகை வகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக