சிக்ஸ் பேக்கும், சைஸ் ஜீரோவும். ஆபத்து ?!,
உடுத்துகிற உடையில் இருந்து உச்சரிக்கிற மொழி வரை சகலத்துக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சினிமாதான் இன்ஸ்பிரேஷன்! தமது ஆஸ்தான ஹீரோவோ, ஹீரோயினோ செய்கிற விஷயங்களை, அது தமக்குத் தேவையா, பொருந்துமா என்கிற எந்தக் கேள்விகளுக்கும் இடமளிக்காமல் பின்பற்றுவதில் இவர்களுக்கு இணையே இல்லை.ஹீரோக்களிடமிருந்தும், ஹீரோயின்களிடமிருந்தும் சாமானிய ரசிகர்கள் மத்தியில் பற்றிக்கொண்ட பல விஷயங்களில் ஒன்றுதான் சிக்ஸ் பேக் மோகமும், சைஸ் ஜீரோ தாகமும்!
பாலிவுட் படங்களில் ‘கான்’களும், அதைத் தொடர்ந்து நம்மூர் ஹீரோக்களில் சிலரும் உடம்பைத் திறந்து காட்ட, ‘சிக்ஸ் பேக்’ உடல்வாகு பிரபலமானது. கொழு கொழு ஹீரோயின்களே அழகிகளாக பூஜிக்கப்பட்ட சினிமா உலகில், ஒல்லிக்குச்சி உடம்புதான் கவர்ச்சியானது என்கிற புது டிரெண்டை உருவாக்கிப் புண்ணியம் கட்டிக் கொண்டார் பாலிவுட் பேரழகி கரீனா கபூர். விளைவு... இளம் பெண்களிடையே சைஸ் ஜீரோ காய்ச்சல்!
சிக்ஸ்பேக்கும் சைஸ் ஜீரோவும் உண்மையிலேயே ஆரோக்கிய உடலமைப்பின் அடையாளங்களா? கமல், சூர்யா, விஜய், த்ரிஷா, ஸ்ருதிஹாசன், மும்தாஜ் என கோடம்பாக்கப் பிரபலங்கள் பலரின் உடற்பயிற்சி ஆலோசகரான ஜெயக்குமாரிடம் பேசினோம். ‘‘பாலிவுட்ல சல்மான் கான், ஷாருக் கானும், நம்ம தமிழ் சினிமால சூர்யாவும் அறிமுகப்படுத்தின பிறகு தான் இங்கே சிக்ஸ் பேக் ஃபேஷன் பெரிசா பேசப்பட்டது. ஆனா அது ரொம்ப காலமா பழக்கத்துல இருக்கிற விஷயம்தான்.
ஆணழகன் போட்டிகள்ல கலந்துக்கிறவங்கக்கிட்ட காலங்காலமா சிக்ஸ் பேக் ஃபேஷன் இருக்கு. உடம்பை டைட்டாக்கி, வயிற்றுப்பகுதில ‘கட்ஸ்’ தெரியற மாதிரியான அமைப்புதான் சிக்ஸ் பேக். சராசரியா ஒரு மனிதருக்கு 20 சதவிகித கொழுப்பு அவசியம். ஆனா, சிக்ஸ் பேக் வைக்க விரும்பறவங்க உடம்புல கொழுப்பே இருக்கக்கூடாது. கொழுப்போட அளவை 7, 6, 5ன்னு குறைச்சாத்தான் அது சாத்தியம். அதுக்காக அவங்க சாப்பாடு, வாழ்க்கை முறைன்னு எல்லாத்தையும் மாத்திக்கணும். விரும்பின எதையும் சாப்பிட முடியாது.
கொழுப்புங்கிறது பலரும் நினைச்சிட்டிருக்கிற மாதிரி நம்ம உடம்புக்கு எதிரியில்லை. உடம்போட உஷ்ணநிலையை சரிவிகிதத்துல வச்சிருக்கவும், உள் உறுப்புகளோட சீரான இயக்கத்துக்கும் அது அவசியம். வைட்டமின் ஏ, டி மற்றும் கே - இந்த மூன்றையும் கொழுப்புல கரையற வைட்டமின்கள்னு சொல்றோம். கொழுப்பு இருந்தாதான் இந்த மூன்றும் உடம்புக்குள்ள கிரகிக்கப்படும். அது இல்லாதப்ப, எலும்புகள், நரம்புகள், பற்கள்னு எல்லாமே
பலமிழக்கும். ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் உற்பத்திக்கும் கொழுப்புச்சத்து ரொம்பவே அவசியம்.
அதனால கொழுப்போட அளவு, சராசரியை விடக் குறையற போது, அது ஆண்மையை பாதிக்கிற அபாயத்தையும் கொடுக்கும்...’’ - ஜெயக்குமார் தரும் புதிய தகவல்கள் மிரள வைக்கின்றன. ‘‘‘ஏழாம் அறிவு’ படத்துல சூர்யா, சிக்ஸ் பேக் காட்டியிருப்பார். சில காட்சிகள்ல மட்டும்தான் அதைப் பார்த்திருக்க முடியும். ஏன்னா நாள் கணக்கா, மாசக்கணக்கா, வருஷக்கணக்கா வச்சிருக்கிற விஷயமில்லை அது. ஆணழகன் போட்டிகள்ல கலந்துக்கிறவங்ககூட, போட்டியன்னிக்கோ, போட்டோ செஷன் நடக்கற அன்னிக்கோ மட்டும்தான் அப்படி வச்சிருப்பாங்க.
அன்னிக்கு முழுக்க தண்ணீர் கூடக் குடிக்க மாட்டாங்க. தண்ணீர் குடிச்சா, அது, தசைக்கும் சருமத்துக்கும் இடையில போய் உட்கார்ந்துக்கிட்டு, சிக்ஸ் பேக்கை மறைச்சிடும். இப்படி தண்ணீரே குடிக்காம இருக்கிறது அடுத்த ஆபத்து. சராசரியா ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் அவசியம். சிக்ஸ் பேக் ட்ரை பண்ற எல்லாருக்கும் அதோட முதல் பாதிப்பு முகத்துல தெரியும். முகமெல்லாம் ஒட்டிப்போய், வறண்டு, கண்கள் உள்ளே போய், ஆரோக்கியமில்லாதது போலத் தெரிவாங்க.
இதையெல்லாம் தவிர்த்து, தொப்பையே இல்லாம, தட்டையான வயிறோட, நல்ல உடல்வாகு வரணும்னா, சாப்பாட்டுல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவைக் குறைச்சு, புரோட்டீனை அதிகப்படுத்தி, கூடவே சில உடற்பயிற்சிகளையும் செய்தாலே போதும்...’’ என்கிறவரின் பேச்சு, இளம் பெண்களின் சைஸ் ஸீரோ மோகம் பற்றித் திரும்புகிறது. ‘‘கரீனா கபூர் ஆரம்பிச்சு வச்சாங்க. அதைப் பார்த்துட்டு இடுப்பளவை 24 இன்ச்சுக்கு குறைக்கற வரை பெண்கள் தயாராயிட்டாங்க. சிக்ஸ் பேக் மாதிரி யேதான் இவங்களுக்கும் உடம்புல கொழுப்பே இருக்காது. ஏற்கனவே ஒல்லியா இருந்தாலும், இன்னும் ஒல்லியாகணுமோன்னு நினைச்சுக்கிறாங்க.
‘புலிமியா’, ‘அனோரெக்சியா நெர்வோஸா’ பாதிப்புகளுக்குத் தள்ளப்படறாங்க. அதாவது சாப்பிட்ட உடனே வாய்க்குள்ள கையை விட்டு வாந்தியெடுக்கறது, சாப்பிடாமலேயே இருக்கிறது, அளவுக்கதிகமா எக்சர்சைஸ் பண்றது மாதிரியான டெக்னிக்குகளை செய்யறவங்களும் இருக்காங்க. உடம்புக்குத் தேவையான சத்து எதுவும் உள்ளே போகாது. மாதவிலக்கு பிரச்னை, ஹார்மோன் கோளாறு, முடி உதிர்வு, சரும வறட்சி, நகங்கள் கலர் மாறுவதுன்னு ஆரம்பிக்கிற பிரச்னைகள், கொஞ்ச நாள்ல எதுக்கெடுத்தாலும் எரிச்சல், யாரைப் பார்த்தாலும் சண்டைன்னு உளவியல் ரீதியாகவும் பாதிப்பைக் காட்டுது.
சைஸ் ஸீரோ உடல்வாகுள்ள மாடல்களோட படங்களை பத்திரிகைகளோட அட்டைகள்ல போடக்கூடாதுன்னு சில நாடுகள்ல தடையே விதிச்சிருக்காங்கன்னா, அது எந்தளவு ஆபத்தானதுன்னு புரிஞ்சுக்கலாம்’’ என எச்சரிப்பவர், சிறிய இடையும் சரியான எடையும் எல்லாப் பெண்களுக்கும் சாத்தியம் என்றும் அதற்குக் கொஞ்சம் மெனக்கெட்டாலே போதும் என்றும் நம்பிக்கை தருகிறார். ‘‘ஏதாவது ஒரு ஜிம்ல சேர்ந்து, சரியான ஆலோசகரோட வழிகாட்டுதலோட கார்டியோ பயிற்சிகளை செய்யணும். கூடவே சரியான உணவுக்கட்டுப்பாட்டையும் கடைப்பிடிச்சாலே போதும்!’’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக