செவ்வாய், ஜூன் 12, 2012

குடுகுடுப்பை


குடுகுடுப்பை
பொடி ஆசாமி’களிடம் நீங்களும் மாட்டிக்காதீங்க..!




கையில் குடுகுடுப்பை இருக்கிறது. ஆனால் அவருக்கு அதை அடிக்கத் தெரியவில்லை. நடுத்தர வயது. பளபளப்பாக சட்டை போட்டிருக்கிறார். சென்னை புற நகர் பகுதிகளில் உள்ள தனி வீடுகளை இவர் குறிவைக்கிறார்.

முதலில் வீட்டை பார்க்கிறார். வீடு பளபளப்பான பெயிண்ட் பூச்சு இல்லாமல் சற்று மெருகுகுலைந்து கிடந்தால், அந்த வீட்டில் வசிக்கும் கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் இருக்காது, அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் என்பது இவரது, `கணிப்பு’!

அப்படிப்பட்ட வீட்டை தேர்ந்தெடுத்து, வீட்டு முன்னால் நின்று, `இந்த வீட்டில் வசிக்கும் ராசாவுக்கு பெரிய கண்டம் இருக்கிறது’ என்று சத்தமாக சொல்கிறார். கணவருக்கு கண்டம் என்றால் உருகவேண்டியது மனைவியின் கடமை அல்லவா!

அந்த குடுகுடுப்பை பயன்படுத்தும் இந்த அஸ்திரம், அந்த வீட்டு குடும்பத்தலைவியை அசைத்து விடும். உடனே, ஏதாவது தீர்வு சொல்வார் என நினைத்து அந்த ஆளை நோக்கி நடந்து வருவாள். அப்போது அந்த பெண்ணின் முகத்தை பார்த்ததும், குடுகுடுப்பை `அவள் தான் சொல்வதைக் கேட்டு ரொம்ப பயந்திருக்கிறாளா? ஓரளவு பயந்திருக்கிறாளா’ என்பதை முடிவு செய்துவிடுகிறார்.

முகத்தில் தெரியும் பதட்டத்தைவைத்து ரொம்ப பயந்து போயிருப்பதை உணர்ந்துவிட்டால், தைரியமாக கேட்டை திறந்துகொண்டு, அந்த ஆள் உள்ளே அடியெடுத்துவைக்கிறார். உள்ளே நுழையும்போதே `எனக்கு பணம் எதுவும் வேண்டாம். உனக்கு நல்லது செய்ய எனக்கு உத்தரவு. ஒரு பேப்பரை தர்றேன். அதை அப்படியே உன் வீட்டை சுற்றி, தெருவில் போட்டுவிடு. உன் கணவருக்கு வரும் கண்டம் அதோடு போய்விடும்’ என்றபடியே, வீட்டு வாசலில் மறித்த நிலையில் அந்த குடும்பத்தலைவி நின்று கொண்டிருந்தாலும், லேசாக இடித்ததுபோல் அவராகவே உள்ளே புகுந்துவிடுகிறார்.

வீட்டுக்குள், ரோட்டைப் பார்த்து அவர் உட்காருவார். (யாராவது வீட்டின் உள்ளே திடீரென்று வருகிறார்களா? என்பதை கவனிப்பதற்காக) அந்த பெண்ணை தன் முகத்தை பார்த்து உட்கார சொல்கிறார். அவளுக்கு இவர் முகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. அடுத்து மின்னல் வேகத்தில் அந்த நபர் செயல்படத் தொடங்குகிறார்.

ஒரு பேப்பரை எடுத்து அதில் ஒருவித பொடியை கொட்டுகிறார். `இதை நன்றாக பார். உன் கணவரைப் பிடித்த பீடை இப்போதே போகப்போகிறது. உன் இஷ்ட தெய்வத்தை நினைத்துக்கொள்’ என்றபடி, அந்த பெண்ணின் முகத்தின் அருகில் அந்த பேப்பரை நீட்டுகிறான்.

ஒரு அன்னியன் வீட்டிற்குள் வந்தது- தன் அருகில் இருப்பது- தன் முகத்திற்கு நேராக எதையோ நீட்டுவது- அடுத்து என்ன நடக்கும் என்று பதட்டம் கொள்வது- போன்றவை எல்லாம் சேர்ந்து அவளுக்குள் பயத்தை உருவாக்குகிறது. பயம் உருவாகும்போது இதய துடிப்பு அதிகமாகும். மூச்சை விடுவதும் அதிகரிக்கும். அந்த நேரம் பார்த்து, `இதோ உன் குடும்பத்தில் இருந்து அத்தனை ஆபத்துகளும் இந்த பொடிபோல பறந்து போகிறது’ என்றபடி அந்த பெண்ணின் மூக்கிற்கு அருகில் அந்த பேப்பரை வைத்துவிட்டு, அவள் முகத்தை நோக்கி ஊதுகிறார். இதுதான் `கிளைமாக்ஸ்’!

வேகமாக அவள் இழுக்கும் மூச்சுக்குள், அந்த பொடியின் நெடி செல்கிறது. அடுத்து நிலைமையே தலைகீழாகிறது. உடனே அவன் எது எதையோ எடுத்து வரும்படி கேட்கிறான். அந்த பெண்ணும் `கீ’ கொடுத்த பொம்மைபோல் அவன் கேட்டதை எல்லாம் எடுத்துவந்து கொடுக்கிறாள். பெரும்பாலும் வீட்டின் உள்ளே இருக்கும் நகை, அவள் அணிந்திருக்கும் நகை, வீட்டின் உள்ளே இருக்கும் பணம் போன்றவைகளை அவன் கேட்க, கேட்க மறு பேச்சின்றி கொடுத்துவிடுகிறாள். `கதவை பூட்டிக்கொள். ஒரு மணி நேரம் கழித்து திற’ என்று உத்தரவு போட்டுவிட்டு போகிறான். அதற்கும் கட்டுப்படுகிறாள், அந்தப் பெண்.

இந்த புதுவித `பொடி’ மேட்டரில் சில பெண்கள் நகை, பணத்தை இழந்திருக்கிறார்கள். `கணவருக்கு ஆபத்து.. குழந்தைக்கு ஆபத்து..’ என்று குரல் கொடுத்துக்கொண்டு வரும் இந்த `பொடி ஆசாமி’களிடம் நீங்களும் மாட்டிக்காதீங்க..!

நன்றி-தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக