புதன், பிப்ரவரி 29, 2012

கூடங்குளம் போராட்டத்திற்கு, வெளிநாட்டு (சதி) நிதி . !?


 கூடங்குளம் போராட்டத்திற்கு, வெளிநாட்டு (சதி) நிதி . !?




 கூடங்குளம் போராட்டத்திற்கு, வெளிநாட்டு நிதியுதவி வந்தது அதிகாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. நிதி உதவி வழங்கியது குறித்து, மத்திய, மாநில உள்துறை மற்றும் உளவுத்துறையிடம், ஜெர்மன் தொழிலதிபர் சொனாட்டி ஹெர்மான் என்பவர், ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இந்தியாவில் தங்கியிருந்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால், நேற்று முன்தினம் நள்ளிரவு, அவர் சென்னையில் இருந்து ஜெர்மனி நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டார். இதன் அடிப்படையில், உதயகுமார் கும்பல் மீது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கண்காணிப்பு: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான ஒரு குழுவின் போராட்டம் குறித்து, மத்திய, மாநில உள்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், போராட்ட வல்லுனர் குழுவை சேர்ந்த லால்மோகன்,நீலகண்டன் உள்ளிட்ட பலரது நடவடிக்கைகளை, மத்திய உள்துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு, அமெரிக்கா, சுவீடன், ஐஸ்லாந்து, பின்லாந்த் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் செயல்படும், பசுமை அமைப்புகள் மூலம் நிதியுதவி வருவதாக, மத்திய உள்துறைக்கு ரகசியத்தகவல்கள் கிடைத்தன. மத்திய உள்துறை அதிகாரிகள், இரண்டு பேர் கூடங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தங்கி, உதயகுமார் கும்பலின் நடவடிக்கைகளை நோட்டமிட்டனர். இதில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சொனாட்டி ஹெர்மான் என்பவர், திருவனந்தபுரத்திற்கு அடிக்கடி வருவதாகவும், அவரை அணு உலை எதிர்ப்புக் குழுவினர் ரகசியமாகச் சந்திப்பதாகவும், மத்திய உள்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

பீதி: ஜெர்மானியர் ஹெர்மானின் வாக்குமூலத்தால், அணு உலை போராட்டத்தை பாதியில் விட்டு விட்டு, தப்பியோட போராட்டக் குழுவினர் சிலர் முடிவு செய்து உள்ளனர். சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும், உதயகுமார் கும்பல் மீதான நடவடிக்கை, அதிரடியாக துவங்கும் என்றும், கூடங்குளம் போராட்டம் ஒரேநாளில் முடிவுக்கு வரும் என்றும், போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவுக்குள் நுழையத் தடை: தமிழக போலீசிடம் பிடிபட்ட ஹெர்மானின் பாஸ்போர்ட்டில், இந்திய அரசு "பிளாக் மார்க்' முத்திரையிட்டு, அவரை நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து புறப்பட்ட லூப்தான்சா விமானம் மூலம், பிராங்க்பர்ட் நகருக்கு அனுப்பியுள்ளது. அவர் இந்தியா வருவதற்கு, நிரந்தரத் தடை விதித்தும் முத்திரையிட்டு உள்ளதாக, குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெர்மானின் மொபைல்போனை, தமிழக போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். இந்த மொபைல்போன், மத்திய உள்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஹெர்மான் மீது நடவடிக்கை எடுக்க, இந்திய வெளியுறவுத் துறை மூலம், ஜெர்மன் தூதரகத்திடம் பரிந்துரைக்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


சிக்கிய ஏஜன்ட்: அந்த நபரை, உள்ளூர் சிறப்புப் படை உளவுத்துறை போலீசாரும் கண்காணித்தனர். அந்த நபர் திருவனந்தபுரத்திலிருந்து, அடிக்கடி நாகர்கோவிலுக்கு வருவதை, போலீசார் கண்டுபிடித்தனர். அவர் மூலம், மீனவ கிராமங்களுக்கு நிதியுதவி கிடைத்தது. மத்திய, மாநில போலீசார் இணைந்து, நேற்று முன்தினம், நாகர்கோவிலில் லாட்ஜில் தங்கியிருந்த ஹெர்மானை பிடித்து விசாரித்தனர். கூடங்குளம் போராட்டத்திற்கு, வெளிநாடுகள் மூலம் நிதியுதவி செய்வதை, விசாரணையின் போது அவர் ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து, வழக்குப் பதிந்துள்ளனர். பின், அவரை ரகசியமாக சென்னைக்கு அழைத்து வந்து, விமான நிலையத்தில் தங்க வைத்தனர். நேற்று முன்தினம் மாலை முதல், நள்ளிரவு ஒரு மணி வரையில் ரகசிய அறையில், துருவித் துருவி விசாரித்தனர். இந்த விசாரணை வீடியோவாக எடுக்கப்பட்டது.
வாக்குமூலம்: இது குறித்து, மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜெர்மன் தொழிலதிபர் ஹெர்மான், தன்னை தொழிலதிபராகக் காட்டி, தொண்டு செய்வதற்கு வருவதாக, இந்தியா வந்து செல்வதாக கூறினார். இவர் வெளிநாட்டு பணத்தை பல்வேறு வழிகளில், இந்தியாவுக்குள் கொண்டு வரும், "ஹவாலா' ஏஜன்ட் என தெரிய வந்துள்ளது. இவர் மூலம், வெளிநாட்டு பசுமை அமைப்புகள் சில, வெளிநாடுகளின் உத்தரவை அடுத்து, இந்திய அணு உலை நவீன தொழில்நுட்பத்தைத் தடுக்க சதி செய்கின்றனர். கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும், ஜெர்மானியர் ஹெர்மானுக்கும், பல மாதங்களாக தொடர்பு உள்ளதை, அவரது வாக்குமூலத்திலேயே பெற்று விட்டோம். ஹெர்மான் மூலம் பணம் பெற்று பயன் அடைந்தவர்கள் மீது, விரைவில் நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.







நன்றி  : தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக